Published : 16 May 2018 09:02 AM
Last Updated : 16 May 2018 09:02 AM

ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை ஏன்?: தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விளக்கம்- உயர் நீதிமன்றத்தில் வழக்கு; டிஜிபியிடம் புகார்

ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் விளக்கம் அறித்துள்ளனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்தவர் பி.ஜெ. என்ற பி.ஜெய்னுல் ஆபிதீன். இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூடி, தலைவர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்க முடிவு செய்தது.

ஜெய்னுல் ஆபிதீன் நீக்கப்பட்டது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

பெண்ணின் குடும்பத்தினர் புகார்

தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.சையது இப்ராகிம் கூறியதாவது:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உயர்நிலைக் குழு உறுப்பினராக இருப்பவர் தவறு செய்தால், அவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கிக்கொண்டு, வெளிப்படையாக அறிவிக்காத வகையில் நடவடிக்கை எடுத்து வந்தோம். ஆனால், கடைசியாக நடந்த மாநில செயற்குழு கூட்டத்திலும், அதன் தொடர்ச்சி யாக நடந்த மைசூர் கூட்டத்திலும் இந்த நடைமுறை சரியானது அல்ல என முடிவு செய்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சில முடிவுகளை எடுத்தது. உயர்நிலைக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மீது புகார்கள் வந்து, அது நிரூபணமானால் அதுகுறித்த அறிவிப்பை மக்களிடத்தில் திறந்த புத்தகம்போல வெளியிட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்தான் ஜெய்னுல் ஆபிதீன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவை தெரிவிக்கிறோம். கடந்த 12-ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலை குழு கூட்டம் நடந்தபோது, ஜெய்னுல் ஆபிதீனுடன் போனில் பேசிய பெண்ணின் உறவினர்கள் சிலர் நேரில் வந்து, ஒரு புகாரை கொடுத்தனர். குறிப்பிட்ட ஆடியோவில் பேசியது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்தான் என்றும், ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் அளித்த ஆதாரங்கள் குறித்து, உயர்நிலைக் குழு உடனே ஆய்வு செய்தது. அதில், ஜெய்னுல் ஆபிதீன் மீதான குற்றச்சாட்டு உண்மை என நிரூபணம் ஆனது. இந்த புகார் குறித்து ஜெய்னுல் ஆபிதீனுடம் விளக்கம் கேட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விதியின்படி, ஜெய்னுல் ஆபிதீனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுத்தோம். இனி மேல் எந்தக் காலத்திலும் அவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்தப் பொறுப்புக்கும் வரமுடியாது என்பதையும் உயர்நிலைக் குழு அறிவித்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம் கூறும்போது, “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற ஒரு அமைப்பை வேறு எங்கும் பார்க்க முடியாது. இந்த ஜமாஅத்தை நிறுவிய தலைவர் மீதே நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த அறிவிப்பை கேட்ட பின்னரும் தொண்டர்கள் தங்களது இறைப் பணியையும், சமூகப் பணியையும் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் எந்த தனி மனிதரையும் தலைவனாக கொள்ளாமல், அல்லாவை மட்டுமே தலைமையாக கொண்டதால்தான், இந்த அமைப்பின் தலைவர் மீதே நடவடிக்கை எடுக்க முடிந்தது” என்றார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முக மது ரைசுதீன் என்பவர் கூறும்போது, “பி.ஜெய்னுல் ஆபிதீன், மேலும் பல பெண்களிடம் பாலியல் குற்றங்கள் செய்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்த ஆதாரங்களுடன் அவர் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். தவறு செய்ததை ஒப்புக்கொண்ட ஜெய்னுல் ஆபிதீன் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் எம்.இப்ராஹிம் கூறும்போது, “மதத்தின் பெயரால் இஸ்லாமிய பெண்களையும், இளைஞர்களையும் ஜெய்னுல் ஆபிதீன் தவறாக பயன்படுத்துகிறார். ஜெய்னுல் ஆபிதீனுக்கு வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணம் வருகிறது. இதை தெரிந்துகொண்டதால் என்னை பலமுறை கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்து இருக்கிறேன்” என தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அறிய ஜெயினுல் ஆபிதீனை தொடர்புகொள்ள முயன்றோம். அவருடன் பேச இயலவில்லை. தனது தரப்பு விளக்கத்தை அளிக்க அவர் முன்வந்தால் அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x