Published : 11 May 2018 08:03 AM
Last Updated : 11 May 2018 08:03 AM

மேலூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆர்.சாமி மரணம்

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், மேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.சாமி நேற்று மரணமடைந்தார்.

மேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சாமி(53). இவர் 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலூர் தொகுதி மக்களிடம் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தார்.

தற்போது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில அமைப்புச் செயலாளராக செயல்பட்டார். சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆர்.சாமி சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது உடலுக்கு தினகரனும், ஏராளமான கட்சித் தொண்டர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதிமுகவில் எந்த சர்ச்சையிலும் சிக்காத சாமிக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா ‘சீட்’ கொடுக்காததற்கு அவரது உடல்நிலையே முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் அணியில் மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தினகரனுக்கு அரசியல் நெருக்கடியான காலகட்டத்தில் உடன் இருந்தார். மதுரை மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கு இணையாக தினகரனுக்கு செல்வாக்கை திரட்டியவர்.

எம்ஜிஆர் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக 1987-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 1989-ம் ஆண்டு அதிமுகவில் வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 1996-ம் ஆண்டு மேலூர் நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதிமுகவின் நகரச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஜெயலலிதாவால் 2000-ம் ஆண்டு மாநில இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x