Published : 11 May 2018 07:31 AM
Last Updated : 11 May 2018 07:31 AM

ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம்; நெடுவாசலில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் கொண்டாட்டம்: போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முடிவை கைவிடுவதாக ஜெம் நிறுவனம் கூறி இருப்பது போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என நெடுவாசல் மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

தமிழ்நாட்டில் நெடுவாசல் உட்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்.15-ல் அறிவித்தது.

இந்த திட்டத்தை எதிர்த்து 16-ம் தேதியில் இருந்து நெடுவாசலில் பல்வேறு கட்டங்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகாடு, கோட்டைக்காடு, நல்லாண்டார்கொல்லை போன்ற இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் வாக்குறுதியை ஏற்று நெடுவாசலில் முதற்கட்ட போராட்டம் மார்ச் 9-ம் தேதி தற்காலிகமாக கைவிடப்பட்டது. அதன்பிறகு மார்ச் 27-ம் தேதி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஜெம் லேபரட்டரி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதைக் கண்டித்து நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் போராட்டம் வெடித்தது. இதுதொடர்பாக தமிழக அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று அக்.2-ல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், “நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் வருவாய் இழப்பை ஏற்படுத்தி இருப்பதாலும், குத்தகையை தமிழக அரசு எங்கள் நிறுவனத்துக்கு மாற்றித் தராததாலும் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுவதற்கு தயாராக உள்ளோம். அதற்குப் பதிலாக வேறு இடம் அல்லது வேறு மாநிலம் ஒதுக்கித் தருமாறு எரிவாயு மற்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பதாக” டெல்லியில் ஜெம் நிறுவனத்தின் முதுநிலை அதிகாரி ஹரிபிரசாத் தெரிவித்திருந்தது ‘தி இந்து’வில் நேற்று (மே 10) பிரத்யேக செய்தியாக வெளியானது.

இதை வரவேற்றுள்ள நெடுவாசல் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி நெடுவாசலில் நேற்று பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மக்கள் கொண்டாடினர்.

இதுகுறித்து ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி கூறியபோது, “மக்களுக்கும், இயற்கை வளத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடிய இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக 200 நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை பல்வேறு கட்சிகளும் ஆதரித்தன. தற்போது நெடுவாசலில் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என மத்திய அரசிடம் ஜெம் நிறுவனமே தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நெடுவாசலில் செயல்படுத்துவதற்கான திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மு.மாதவன், “நாட்டுக்கே முன்னுதாரணமாக நெடுவாசலில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இது. இத்திட்டத்துக்காக நெடுவாசல் விவசாயிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, நிலங்களை உரிய விவசாயிகளிடமே தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x