Published : 10 May 2018 12:32 PM
Last Updated : 10 May 2018 12:32 PM

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் ஜெம் நிறுவனம்: சரத்குமார் வரவேற்பு

நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்தப்படவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகம் அல்லாமல் வேறு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என, ஜெம் நிறுவனம் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சரத்குமார் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு, மத்திய அரசு ஜெம் லேபாரட்டரீஸ் நிறுவனத்திற்கு 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

இத்திட்டத்திற்கு எதிராக சுமார் 100 நாள்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால், ஒஎன்ஜிசிக்கு வழங்கிய குத்தகையை ஜெம் நிறுவனத்திற்கு மாற்றுவதில் தமிழக அரசு காலதாமதம் செய்து வந்தது.

இதன் விளைவாக தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியளிக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே வேறு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என ஜெம் நிறுவனம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

ஏற்கெனவே ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளாதாலும், தமிழக அரசின் காலதாமதத்தால் இழப்பு ஏற்பட்டதாலும் ஜெம் நிறுவனம் இத்தகைய முடிவு எடுத்திருப்பது பலவிதமான போராட்டங்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் கிடைத்த முதல் வெற்றி.

நெடுவாசல் கிராமத்து மக்களுக்கும், போராளிகளுக்கும், தலைவர்களுக்கும் மத்திய அரசின் தொடர் கடிதங்களுக்கு செவிசாய்க்காமல் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய போராளிகளுக்கு உதவி செய்திருக்கும் தமிழக அரசுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் ஒற்றுமை, நியாயமான போராட்டங்கள், கோரிக்கைகள் தாமதமாக நிறைவேறினாலும் இறுதியில் ஜனநாயகமே வெற்றி பெறும். ஒப்பந்தக்கார நிறுவனம் ஜெம் மாற்று இடம் கோரியிருக்கும் தகவல் நிலையான வெற்றியை நெடுவாசல் கிராமத்து மக்களுக்கு தர வேண்டும்.

மேலும் மத்திய அரசு இதுபோன்ற மக்களை பாதிக்கக்கூடிய திட்டம் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து, அத்திட்டம் குறித்த அப்பகுதி மக்களின் மனநிலையையும், நிலைப்பாடையும் அறியாமல் தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

எடுக்கப்படும் முடிவு நீண்ட கால தீர்வாக, அரசாங்கம் மாறும் போது திட்டங்கள் மாறக்கூடியதாக இல்லாமல் சுற்றுச்சூழலையும், மக்கள் நலனையும் மனதில் கொண்டு எடுக்கப்பட வேண்டும்” என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x