Published : 30 Apr 2018 12:59 PM
Last Updated : 30 Apr 2018 12:59 PM

திருமணத்திற்கு மறுத்த இளம் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சி: ஒரு தலைக்காதலால் விபரீதம்

காட்பாடியில் திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்த மாணவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ஷபீர் (23). தனியார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

ஷபீரை திருமணம் செய்துகொள்ள பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள இளம்பெண் விரும்பினார். ஆனால் காலம் கடத்தாமல் உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஷபீர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஷபீர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்தார். அதில், தனது மகளை ஷபீர் ஒருதலையாக காதலிப்பதுடன், மதம் மாறும்படி மிரட்டுகிறார் எனக் கூறியிருந்தார். இதுதொடர்பாக, காட்பாடி காவல்நிலைய போலீஸார் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். முடிவில் திருமணம் செய்துகொள்ளும்படி பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்புள்ளனர்.

இந்நிலையில், ஷபீரும் அந்தப் பெண்ணும் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்டுள்ளனர். பின்னர் வீட்டுக்கு புறப்படும்போது திருமணம் தொடர்பாக ஷபீர் பேசியுள்ளார். இதில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் கழுத்தை வெட்டிவிட்டு அவர் தப்பி ஓட முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்தப் பெண்ணை மீட்டு சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சிலர் ஷபீரை பிடித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்த காவல் ஆய்வாளர் நாகராஜ், ஷபீரை கைது செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x