Last Updated : 24 Apr, 2018 08:35 AM

 

Published : 24 Apr 2018 08:35 AM
Last Updated : 24 Apr 2018 08:35 AM

நிர்மலாதேவி ஆடியோ விவகாரம்; சிபிசிஐடி பிடியில் காமராசர் பல்கலை உதவி பேராசிரியர் முருகன்- அதிகாரிகள், பேராசிரியர்கள் கலக்கம்

அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட, மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் என்பவரை சிபிசிஐடி போலீஸார் நேற்று பிடித்துள்ளனர். அவரிடம், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அருப்புக்கோட்டையில் மாணவியரை பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டிய கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியை போலீஸார் கைது செய்தனர். தற்போது அவரை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஓரிரு உதவிப் பேராசிரியர்கள், பிஎச்டி மாணவர் உட்பட சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் உதவி விசாரணை அதிகாரியான டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம் உட்பட 5-க்கும் மேற்பட்ட குழுவினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர். பேராசிரியை அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பல்கலைக்கழகப் பதிவாளர் சின்னையா, புத்தாக்கப் பயிற்சித்துறை இயக்குநர் கலைச்செல்வன், 2 பேராசிரியைகள் உட்பட சிலரிடம் விசாரணை நடைபெற்றது. அவர்களிடம் தேவைப்படும்போது, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கினர்.

சிக்கிய உதவி பேராசிரியர்

இவ்வழக்கில் முக்கிய சந்தேக நபர்களான உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தலைமறைவாக இருந்ததால் சிபிசிஐடி தனிப்படையினர் அவர்களை தேடிவந்தனர். நேற்று முன்தினம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள திருச்சுழியில் கருப்பசாமியின் மனைவியிடம் விசாரித்தனர்.

இதற்கிடையில், நேற்று காலை உதவி பேராசிரியர் முருகன் அவர் பணிபுரியும் பல்கலைக்கழக நிர்வாக மேலாண்மை (எம்பிஏ) துறைக்கு வந்தார். இது குறித்து முன்னதாகவே தகவல் அறிந்திருந்த சிபிசிஐடி போலீஸார், டிஎஸ்பி கருப்பையா, ஆய்வாளர் சேகர் தலைமையில் பல்கலைக்கழகத்தில் காத்திருந்து அவரை பிடித்தனர். முறைப்படி, அவரிடம் சம்மன் வழங்கப்பட்டது.

பின்னர் அவரை விசாரணைக்காக விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு பிற்பகலில் அழைத்துச் சென்றனர். அவரிடம் எஸ்.பி. ராஜேஸ்வரி, டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம் தலைமையிலான போலீஸார் விசாரிக்கின்றனர். இவ்வழக்கில் புதிய திருப்பமாக உதவி பேராசிரியர் ஒருவர் சிக்கி உள்ளதால் ஆடியோ விவகாரத்தில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

உயர் பதவிக்கு உத்தரவாதம்

சிபிசிஐடி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது: நிர்மலாதேவியின் ஊரான அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் உதவி பேராசிரியர் முருகன். இவர் நிர்மலாதேவி படித்த அதே கல்லூரியில்தான் படித்திருக்கிறார். இதன்மூலம் முருகனுக்கு அவருடன் நெருங்கிய நட்பு இருந்துள்ளது. முருகனின் உறவினரான கருப்பசாமி, பல்கலைக்கழக ஆய்வு மாணவர் என்பதால், அவருடனும் நிர்மலாதேவி நெருங்கி பழகினார்.

முருகன், கருப்பசாமி ஆகிய இருவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் நிலை அதிகாரிகளிடம் செல்வாக்கு பெற்றிருந்தனர். இதன்மூலம் முருகனும், கருப்பசாமியும் நிர்மலாதேவிக்கு பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி உட்பட சில உதவிகளை செய்துள்ளனர். மேலும், நிர்மலாதேவிக்கு உயர் பதவி பெற்று தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இதுபோன்ற சூழலில் இருவரும் பேராசிரியையுடன் நெருங்கி பழகியது, மொபைலில் அடிக்கடி பேசி இருப்பது சில ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால்தான் இருவர் மீதும் சந்தேகம் வலுக்கிறது. கருப்பசாமியை தேடி வருகிறோம். முருகன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார் என்றார்.

நிர்மலாதேவி பணிபுரிந்த அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணிதத்துறை தலைவர் நாகராஜன் உட்பட மேலும் ஓர் ஆண், பெண் உதவி பேராசிரியர்களும் விருதுநகர் சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி, டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம் ஆகியோர் விசாரணை செய்தனர். நிர்மலாதேவியின் ஆடியோ பேச்சு, கல்லூரியில் அவரது நடவடிக்கை குறித்து விசாரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x