Published : 20 Apr 2018 10:41 AM
Last Updated : 20 Apr 2018 10:41 AM

தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவின்படி காலம் தாழ்த்தாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் சம்பந்தமாக வழக்கு தொடர வகை செய்யும் வகையில் லோக் ஆயுக்தா மற்றும் லோக் பால் சட்டம் கடந்த 2013-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படது.

அப்படி இந்தச் சட்டத்தின் மூலம் ஊழல் நிரூபிக்கப்பட்டால் அந்த ஊழலில் ஈடுபட்டவர்களின் பதவி பறிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்கப்படும். இந்த சட்டத்தின்படி எந்த ஒரு தனி மனிதரும் ஊழல் செய்தவருக்கு எதிராக ஊழல் வழக்கு தொடுக்க முடியும்.

அந்த வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலில் மஹராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 15 மாநிலங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஆனால், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. இப்படி லோக் ஆயுக்தா அமைக்காத மாநிலங்கள் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது சம்பந்தமாக உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதற்கு தமிழக அரசு லோக் ஆயுக்தா சட்டத்தினை தற்போது செயல்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு முன்வைத்த காரணங்களை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக தமிழக அரசு - ஆட்சி அதிகாரத்தில் பலவீனமாக இருப்பதால் தான் லோக் ஆயுக்தாவை அமைக்க முடியவில்லை.

ஊழல் பெருகிக்கொண்டே போகின்ற வேளையில் அதனை கட்டுப்படுத்தவும், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஆளும் அரசு முன்வர வேண்டுமே தவிர அதனை விட்டுவிட்டு ஊழலுக்கு துணை போகும் விதமாக லோக் ஆயுக்தாவை தற்போது செயல்படுத்த முடியாது என்று கூறுவது முற்றிலும் தவறானது.

இந்நிலையில், தமிழக அரசின் பதிலை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் இனியும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்றும், அதற்குண்டான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

 இது வரவேற்கத்தக்கது. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவிற்கேற்ப காலம் தாழ்த்தாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும். அதன் மூலம் இனி தமிழகத்தில் ஊழலுக்கு இடம் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.

லஞ்சம், ஊழல் போன்றவற்றிற்கு சட்டத்தின் மூலமே தீர்வு கிடைக்கும் என்ற நிலை வந்துவிட்ட பிறகு அந்த சட்டத்தை கொண்டுவரவும், செயல்படுத்தவும் ஆளும் ஆட்சியாளர்கள் எச்சூழலிலும் தயக்கம் காட்டவோ, மறுப்பு கூறவோ முன்வரக்கூடாது.

அதற்கு பதிலாக லோக் ஆயுக்தாவை அமைப்போம், லஞ்சம் ஊழலற்ற நிர்வாகத்தையும், நேர்மையான ஆட்சியையும் கொடுப்போம் என மத்திய, மாநில அரசுகள் முன்வந்தால் தான் வளமான மாநிலமும், வலிமையான பாரதமும் உருவாகி நம் நாட்டு மக்கள் முன்னேற்றம் கண்டு, நாடும் வளம் பெறும்” என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x