Published : 20 Apr 2018 07:40 AM
Last Updated : 20 Apr 2018 07:40 AM

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக ஜூன் 2-வது வாரத்தில் சட்டப்பேரவை கூடுகிறது

துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை ஜூன் 2-வது வாரம் மீண்டும் கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 15-ம் தேதி தொடங்கியது. அன்று 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடர்ந்து, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்படும். பேரவை ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, அந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.

ஆனால், பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தற்போது துறை வாரியான நிதி ஒதுக்க மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த வேண்டியுள்ளது. இதற்காக, ஜூன் 2-வது வாரத்தில் சட்டப்பேரவையைக் கூட்ட வாய்ப்பு உள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை நடந்துள்ளது. அதேபோல இந்த ஆண்டும் நடத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியதும் பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் பேரவையை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன..

மானிய கோரிக்கை விவாதங்களின்போது நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை, புதிய அறிவிப்புகள் குறித்து ஒவ்வொரு துறையிலும் அந்தந்த துறை அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறைகளின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதல்வர் தலைமையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறை சார்பில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. அடுத்து வரும் நாட்களில் ஒவ்வொரு துறைகள் தொடர்பாகவும் முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடக்கும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x