Published : 16 Apr 2018 02:54 PM
Last Updated : 16 Apr 2018 02:54 PM

அசோக் நகரில் கண்காணிப்பு கேமராவைத் துண்டித்து அழகு நிலையப் பெண்களிடம் வழிப்பறி: சில மணி நேரத்தில் சிக்கிய இளைஞர்கள்

 அசோக் நகர் பகுதியில் அழகு நிலையப் பெண் ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், மோதிரம் மற்றும் செல்போன்களைப் பறித்துச் சென்ற மூன்று பேரை சில மணி நேரத்தில் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெருவில் தனியார் பெண்கள் அழகு நிலையம் இயங்கி வருகிறது. நேற்று முன் தினம் தமிழ்ப் புத்தாண்டு நாளன்று இரவு அழகு நிலையத்தில் கோமதி (20)  பணிபுரிந்து கொண்டிருந்தார்.  அவருடன் அபிஷா, செல்வி, அனுஸ்ரீ ஆகிய நான்கு பெண்கள் பணியில் இருந்தனர்.

இரவு சுமார் 8.30 மணியளவில் அழகு நிலையத்திற்குள் திடீரென அங்கு நுழைந்த வந்த மூன்று நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா தொடர்பைத் துண்டித்தனர். பெண் ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி பணம், நகைகளைத் தரவேண்டும் என மிரட்டினர். அழகு நிலையத்திலிருந்த பணம் ரூ.18,500 ரொக்கம், 4 செல்போன்கள், 1/4 சவரன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

தனது அழகு நிலையத்தில் கண்காணிப்பு கேமரா துண்டிக்கப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் இது குறித்து அசோக் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக சம்பவ இடத்திற்கு அசோக் நகர் இன்ஸ்பெக்டர் சென்றுள்ளார். அப்போது அழகு நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்டுவிட்டு வெளியே வந்த மூன்று நபர்களையும் பிடித்து கைது செய்தனர்.

போலீஸாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் பல்லாவரம் பம்மல் பகுதியைச் சேர்ந்த சித்தார்த ராஜ் (24), வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சம்சு இம்மத்(23) கோடம்பாக்கம் ஆண்டவர் நகரைச் சேர்ந்த சுதாகர் (26) என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 1 கத்தி, 4 செல்போன்கள், 1/4 சவரன் மோதிரம் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக நவீன் என்பவரையும் போலீஸார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x