Published : 06 Apr 2018 08:41 PM
Last Updated : 06 Apr 2018 08:41 PM

இலங்கை தமிழர்களுக்காக கல்லூரி தொடங்கிறார் கருணாஸ்

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக விரைவில் கல்லூரி தொடங்க உள்ளதாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.

நடிகரும், திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் வியாழக்கிழமை இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந்தார். வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் கருணாஸ் கூறியதாவது:

''தமிழகத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள் உயர் கல்வி பயில்வதில் குறிப்பாக தொழில் கல்வி பயில்வதில் பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் உயர் கல்விக்காக பல கல்லூரிகளில் நானே இடங்களை வாங்கிக் கொடுத்துள்ளேன். மற்றவர்களிடம் கையேந்துவதை விட நானே ஒரு கல்லூரியைக் கட்டமைத்து அதில் இலங்கை தமிழர்களுக்கு இடம் அளிக்கலாம் என்ற எண்ணம் உருவாகியது.

கல்லூரியைக் கட்டுவதற்காக தமிழகத்தில் இடம் வாங்கியுள்ளேன். இதில் கட்டிடங்களைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்வர் விக்னேஸ்வரனை அழைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறேன். தமிழக முதல்வர் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு நாள் ஒதுக்கித் தந்த பின்னர் கல்லூரி கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கும்.''

இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.

மேலும், முதல்வர் விக்னேஸ்வரனிடம் நடிகர் கருணாஸ், ''தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக போராட்டம் நடைபெற்ற போது அதற்கு ஆதரவாக இலங்கையில் தமிழர்கள் போராட்டம் நடத்தியது போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இலங்கையில் தமிழர்கள் அறப்போராட்டம் நடத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

விக்னேஸ்வரன் வரவேற்பு

கருணாஸ் சந்திப்பு குறித்து இலங்கை வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கூறுகையில், ''தமிழகத்தில் உள்ள முகாம்களில் வசிக்கும் ஈழ மாணவர்கள் உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்கவில்லை. ஈழ மாணவர்களின் உயர் கல்விக்காக கல்லூரி ஒன்றை உருவாக்குவதற்கு நடிகர் கருணாஸ் எடுத்து வரும் முயற்சிகள் சிறந்த நடவடிக்கை ஆகும். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உண்டாக்கி இலங்கை தமிழ் மாணவர்கள் உயர் கல்வியை தமிழகத்தில் தொடரும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x