Published : 28 Mar 2018 05:25 PM
Last Updated : 28 Mar 2018 05:25 PM

காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்றத்தில் தகவல் கேட்பு மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாளையே இறுதி நாள் என்பதால் மத்திய அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தகவல் கேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பாக 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கர்நாடகம் தவிர மற்ற மாநிலங்கள் கொண்டாடின.

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முயற்சியில் இம்மியளவு கூட நகரவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. பிரதமரை சந்திக்க அனைத்துக்கட்சித் தலைவர்கள் நேரம் கேட்கப்பட்டபோது பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை.

கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு இயங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது. நாடாளுமன்ற எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என அதிமுகவுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார காலம் இருக்கிறது மார்ச் 29 வரை காத்திருப்போம் என்று அதிமுக சார்பில் பதிலளிக்கப்பட்டது. இந்நிலையில் 6 வார இறுதி கெடு முடிய இன்னும் 24 மணி நேரமே உள்ள நிலையில் மத்திய அரசு இதில் புதிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பாஜக அரசுக்கும், கர்நாடத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸுக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் மட்டுமே இலக்கு என்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அது தேர்தலில் தங்கள் செல்வாக்கை பாதிக்கும் என இரண்டு கட்சிகளும் எண்ணுகின்றன.

அதிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அது பாஜகவை பாதிக்கும் என்பதால் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தவர்கள் இன்று புதிய முடிவு எடுக்க உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மாநிலங்களுக்குள் வெவ்வேறு கருத்து நிலவுவதால் இது குறித்த தெளிவான வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்ற மனுவும், 6 வார கால அவகாசம் போதாது என்ற மனுவையும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் காவிரி மேலாண்மை விவகாரத்தை தள்ளிப்போட முடியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்தும் தப்பிக்கலாம், கர்நாடக தேர்தலும் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மத்திய அரசின் வழக்கறிஞருக்கு இதில் விருப்பமில்லை என்பதால் இன்று தாக்கல் செய்யவேண்டிய மனு தள்ளிப்போய் விட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தின் முடிவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் புதிய மனு தாக்கல் செய்வது குறித்த அறிவிப்பு வரலாம் என தெரிகிறது.

உச்சநீதிமன்றம் நாளை முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை, இன்று மாலைக்குள் மனுத்தாக்கல் செய்யாவிட்டால் சனிக்கிழமை மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x