Published : 28 Mar 2018 08:00 AM
Last Updated : 28 Mar 2018 08:00 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய ஓஎன்ஜிசி நிறுவன விண்ணப்பங்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை வட்டங்களில் 22 எண்ணெய் மற்றும் எரிவாயு சோதனைக் கிணறுகளை 21 கிராமங்களில் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான அனுமதியை கோரி கடந்த 2016-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஓஎன்ஜிசி விண்ணப்பித்தது. விண்ணப்பத்தை பரிசீலித்த வல்லுநர் குழு, 28 நிபந்தனைகள் விதித்து, இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது.

கடந்த 2008-ல் சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் செயல்பட்டுவரும் எண்ணெய்க் கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளிலேயே தற்போது அனுமதி கோரப்படும் 22 கிணறுகளில் 21 கிணறுகளின் அமைவிடம் உள்ளதால், 2008-ல் அனுமதி பெறப்பட்டு செயல்பட்டு வரும் எண்ணெய்க் கிணறுகள் உரிய விதிமுறைகளின்படி உள்ளனவா என ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, சென்னை மண்டல அலுவலகம் கடந்த 27.10.2017 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் விதிமீறல்கள் குறித்து பட்டியலிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில், சுற்றுச்சூழல் அனுமதி விதிமீறல்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என விளக்கம் கேட்டு கடந்த 13.11.2017-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஓஎன்ஜிசிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், மீண்டும் சென்னை மண்டல அலுவலகம் 8.1.2018-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள மற்றொரு அறிக்கையின்படி, எல் 1 வட்டாரத்தில் 15 கிணறுகளில் 14 கிணறுகள் சுற்றுச்சூழல் அனுமதிக்கான காலக்கெடு முடிந்த பிறகே திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், எல் 10 மற்றும் எல் 12 வட்டாரங்களில் மறு சீரமைப்புப் பணிகளை சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதித்த உரிய காலக்கெடுவுக்குள் முடிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையிலும், அமைச்சகத்தின் ஆய்வுகள் அடிப்படையிலும் முக்கியமாக பின்பற்றப்பட வேண்டிய சுற்றுச்சூழல் அம்சங்களில் விதி மீறல்கள் உள்ளதாக காரணம் காட்டி, புதிய திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வதாக ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு கடந்த 22.2.2018 அன்று அனுப்பியுள்ள சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அரசுகள் விளக்க வேண்டும்

இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வ.சேதுராமன் கூறியபோது, “22 எண்ணெய்க் கிணறுகள் தொடங்க சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்பது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடிதத்தால் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் காவிரி டெல்டாவில் இயங்கி வரும் பல எண்ணெய்க் கிணறுகள் உரிய அனுமதியின்றி செயல்படுவதாக டெல்டா வாட்ச் என்ற அமைப்பு கூறியுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் ஓஎன்ஜிசி பணிகள் உரிய அனுமதியுடன்தான் நடக்கிறதா என்பதை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும்” என்றார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி சண்முகசுந்தரம் கூறியபோது, “காவிரி டெல்டாவிலும் அனுமதியின்றி பணிகள் நடைபெறுவதால்தான், போராடுபவர்களின் மீது வழக்குப் பதிவு செய்து அச்சுறுத்துவதாக சந்தேகிக்கின்றோம். ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறுகள் குறித்த ஆவணங்களை வெளியிட கோரிக்கை விடுத்தாலும் ஆட்சியர்கள் கண்டுகொள்வதில்லை. இவ்விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x