Published : 22 Mar 2018 12:18 PM
Last Updated : 22 Mar 2018 12:18 PM

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: சட்டப்பேரவையில் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

 உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் , நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் ஆற்றிய உரை.

துணை முதலமைச்சர் அவர்கள் இந்த அவையில் ஒரு நல்ல உறுதிமொழியை வழங்கியிருக்கிறார். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலை என்னவென்றால், தீர்ப்பு வெளிவந்தவுடன், “6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது”, என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் ஒரு ஆங்கில பத்திரிகையில் அளித்திருந்த பேட்டியை நாம் பார்த்தோம்.

காவிரி விவகாரம் குறித்து நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்களின் கூட்டம் முடிந்தபிறகு, “காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லை”, என்று மத்திய நீர்வளத்துறையின் செயலாளர் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்.

நேற்றைய தினம், மத்திய நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி.சிங் அவர்கள், ”6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது”, என்று பேட்டியளித்து இருக்கிறார். எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய, அந்தத் துறையின் செயலாளரே இப்படியொரு பேட்டி தந்திருக்கும் சூழ்நிலையில், நான் ஏற்கெனவே இந்த அவையில் கேட்டுக் கொண்டதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தின் பிரச்னையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதுபோல, நம்முடைய மாநிலத்தின் பிரச்சினை தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என நாம் பல முயற்சிகளில் ஈடுபட்டும், எதற்கும் பயனில்லை.

ஆகவே, மத்திய அரசு மீது ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக அரசு, அங்கேயிருக்கின்ற உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக கொண்டு வந்து, ஒரு அழுத்தம் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான பணியில், இந்த அரசு உடனே ஈடுபட வேண்டும்”

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x