Published : 22 Mar 2018 12:09 PM
Last Updated : 22 Mar 2018 12:09 PM

அம்பேத்கர் சட்டப் பல்கலை துணைவேந்தராக சூரிய நாராயண சாஸ்திரியை நியமிக்கக் கூடாது: முத்தரசன்

முனைவர் சூரிய நாராயண சாஸ்திரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால், அவரை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முத்தரசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்திற்காக நீதிபதி ஜெகதீசன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்த தேர்வுக்குழு தங்களுக்கு வந்த விண்ணப்பங்களை பரிசீலித்து, முதல் மூன்று இடங்களில் வந்த முனைவர் வின்சென்ட் காமராஜ், முனைவர் டேவிட் அம்புரோஸ், முனைவர் பாலு ஆகியோரின் பெயர்களை தேர்வு செய்து தமிழ்நாடு ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது.

ஆனால், தேர்வுக்குழு பரிந்துரைத்த மூன்று பெயர்களையும் தவிர்த்துவிட்டு முனைவர் சூரியநாராயண சாஸ்திரி என்பவரை சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்படுவார் என செய்தி வெளியாகியுள்ளது.

சூரியநாரயண சாஸ்திரி 2006-2009 காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டக்கல்வி இயக்குநராக பணிபுரிந்தவர். அப்போது அவர்மீது வந்த புகார் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர். பின்னர் புனே பல்கலைக்கழகத்திற்கு சென்று பணிபுரிந்து வருகிறார்.

அங்கும் இவர் மீது குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர், பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர் என்பது உட்பட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சமஸ்கிருத மொழி வெறியர்.

இவர் எந்த வகையிலும் சட்டப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பொறுப்புக்கு தகுதியற்றவர் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆசி பெற்றவர். பிரதமர் அலுவலகத்தில் செல்வாக்கு பெற்றவர் என்ற காரணத்தால் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கும்படி அழுத்தம் தரப்படுகிறது.  

உயர்மதிப்பு வாய்ந்த டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்திற்கு முனைவர் சூரிய நாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமிப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக எதிர்க்கிறது. அவரை நியமனம் செய்யக் கூடாது என தமிழ்நாடு ஆளுநரை வலியுறுத்துகிறது”

என முத்தரசன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x