Published : 18 Mar 2018 04:18 PM
Last Updated : 18 Mar 2018 04:18 PM

ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் எடை குறைப்பு? கோவை மலைக்கிராம மக்கள் குமுறல்

கோவை ஆனைகட்டி சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் நிலவும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டுமென, மலைக்கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கோவை மாவட்டத்தின் கடைக்கோடியில் தமிழக - கேரள எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது ஆனைக்கட்டி கிராமம். இதனைச் சுற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு அரசின் ரேஷன் சேவை சென்றடைய வேண்டும் என்பதற்காக நடமாடும் ரேஷன் கடை வாகனத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சினைகளால் அத்திட்டம் முறையாக செயல்படாமல் உள்ளது. இந்த நிலையில், தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளிலும் எடை குறைப்பு உள்ளிட்ட முறைகேடுகள் அதிகரித்து வருவதாகவும், அதனால் ரேஷன் வசதிகள் முறையாக வந்து சேருவதில்லை எனவும் அங்குள்ள மலைவாழ் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது: ஆனைகட்டியை ஒட்டியுள்ள தூமனூர், சேம்புக்கரை, ஆர்நாட்டுக்காடு, தூவைப்பதி, கொண்டனூர் புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு அரசின் நடமாடும் ரேஷன் வசதி பல மாதங்களாக கிடைப்பதில்லை. ரேஷன் பொருட்களுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், பொருட்களுக்கு ஆகும் செலவைவிட, கூடுதலாக வாடகை கொடுத்து பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. ஒரு கிலோ அரிசிக்கு ரூ.2 வாகன வாடகையாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு என ஒதுக்கப்பட்ட வாகன வசதி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதுமட்டுமில்லாமல் ஆலமரமேடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு ரேஷன் கடை செயல்பட வேண்டும். ஆனால் பொருட்கள் இருப்பு இல்லாததால் பெரும்பாலும் மூடியே கிடக்கிறது. வேறு எங்கும் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது என்பதால், சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம்.

ஆலமரமேடு பிரிவிலும், ஆனைக்கட்டியிலும் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களில் எடை குறைப்பு பிரச்சினை நிலவுகிறது. இவ்விரு கடைகளில் வாங்கும் பொருட்களை வெளியே கொண்டு சென்று எடை பரிசோதனை செய்தால், சுமார் 2 கிலோ வரை குறைவாக இருக்கிறது. இதை நேரடியாக ரேஷன் கடைகளில் கேட்டால், பொருட்கள் விநியோகம் கிடைக்காது என்பதால் கேட்பதற்கே அச்சமாக இருக்கிறது. சர்க்கரை கிலோ ஒன்றுக்கு 100 கிராம் வரை குறைத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் கூறும்போது, ‘மலைப்பகுதி என்பதால் மலைவாழ் மக்களுக்கான ரேஷன் சேவை இங்கு முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எடை குறைப்பு போன்றவற்றின் மூலம் கிடைக்கும் பொருட்கள் அருகாமையில் உள்ள கேரளா மாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கள்ளச்சந்தையில் டன் கணக்கில் அரசி கடத்தி விற்பனை செய்யப்படுவது கடந்த காலங்களில் பல நேரங்களில் கண்டறியப்பட்டுள்ளன. ஆனாலும் உறுதியான நடவடிக்கை இல்லை. மலைவாழ் மக்களுக்கான ரேஷன் பொருட்கள் முறைகேட்டைத் தடுக்க வட்டாட்சியர் தலைமையில் பறக்கும் படை அமைக்க வேண்டும். இங்குள்ள ரேஷன் கடைகளில் இருப்பு விவரங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா வசதியை ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் துறைக்கு பல முறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவிலும் புகார் தெரிவித்துள்ளோம்’ என்றார்.

இந்நிலையில், மலைக்கிராம மக்களிடம் இருந்து வந்த புகாரின் பேரில் நேற்று அப்பகுதியில் மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். எடை குறைப்பு உள்ளிட்ட புகார்கள் வருவதை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், அங்குள்ள ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x