Published : 18 Mar 2018 03:46 PM
Last Updated : 18 Mar 2018 03:46 PM

சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் ‘பங்க்’: கோவையில் அறிமுகப்படுத்த திட்டம்

கோவையில் சிறைவாசிகள் மூலம் பெட்ரோல் ‘பங்க்’கள் நடத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக சிறைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மத்திய சிறையில் சிறைவாசிகள் நன்னடத்தை மற்றும் சுய முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு 687 தண்டனை கைதிகள், 716 விசாரணைக் கைதிகள், குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் 63 பேர், 67 பெண் கைதிகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிலரும் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மூலம் கோவை மத்திய சிறையில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக விசைத்தறி, குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் தயாரிப்பு உள்ளிட்டவை பெரிய அளவில் நடைபெறுகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறைச்சாலை பஜார் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு கடைகளில் அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் சிறைத்துறையின் மேம்பாட்டுக்கு செலவிடப்படுகிறது. அதேசமயம் இந்த பணிகளில் ஈடுபடும் சிறைவாசிகளுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

சிறைவாசிகளுக்கு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக, அடுத்தகட்டமாக பெட்ரோல் ‘பங்க்’ களை திறக்க சிறைத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கோவை காந்திபுரம் பகுதியில் சிறைத்துறைக்கு சொந்தமான இடத்திலேயே பெட்ரோல் ‘பங்க்’கள் அமைத்து, அங்கு சிறைவாசிகளுக்கு பணிகள் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘சிறைவாசிகளின் மறுவாழ்வுக்கான திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில்வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். அதன் ஒருபகுதியாக, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து இரு பெட்ரோ‘பங்க்’கள் அமைக்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெட்ரோலிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதன் அடிப்படையில் காட்டூர் காவல்நிலையம் அருகே நஞ்சப்பா சாலை, பாரதி சாலை இடையே உள்ள 1.5 ஏக்கர் பரப்பளவுள்ள சிறைத்துறை இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டுமே முக்கியமான சாலைகள் என்பதால், தனியார் பெட்ரோல் ‘பங்க்’ களைப் போல 24 மணி நேரமும் இதன் தேவை இருக்கும். அதில் பணியாற்றப்போகும் சிறைவாசிகளுக்கு நல்ல ஊதியமும், அதில் கிடைக்கும் வருவாய் சிறைத்துறை வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும்’ என்றனர்.

சிறை பஜார், பெட்ரோல் ‘பங்க்’கள் என அடுத்தடுத்த திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளதால், சிறைவாசிகள் மறுவாழ்வு திட்டங்களில் கோவை முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x