Published : 18 Mar 2018 03:26 PM
Last Updated : 18 Mar 2018 03:26 PM

விவசாயிகளுக்கு சேதமின்றி கிடைக்குமா தண்ணீர்?

பரம்பிக்குளம் பிரதான பாசனக் கால்வாய் போதிய பராமரிப்பின்றி பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் பாசனத்துக்கான தண்ணீர் சேதமின்றி கிடைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய் வழியாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் முதல் மண்டலத்தில் 94522 ஏக்கரும், 2-ம் மண்டலத்தில் 94202 ஏக்கரும், 3-ம் மண்டலத்தில் 94362 ஏக்கரும், 4-ம் மண்டலத்தில் 94362 ஏக்கரும் என மொத்தம் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.

பரம்பிக்குளம் கால்வாய் இத்திட்டத்தின் மிக பெரிய கால்வாய். இதன் மொத்த நீளம் 124 கி.மீ. ஆகும் இதன் கிளை கால்வாய்களின் நீளம் 1012 கி.மீ. இந்த கால்வாய் உடுமலை, பூலாங்கிணறு, கஞ்சம்பட்டி, கோமங்கலம், பூசாரிபட்டி, புதுப்பாளையம், ஆவலப்பம்பட்டி, செங்குட்டுபாளையம், ஜோத்தம்பட்டி, ராமசந்திரபுரம், கோவில்பாளையம், வீதம்பட்டி வடசித்தூர், ஜே.கிருஷ்ணாபுரம், செஞ்சேரி, கம்மாளபட்டி, ஜல்லிபட்டி, பி.கே.பாளையம், குண்டடம், பொங்கலூர், கொடுவாய், திருப்பூர், அலகுமலை, வடசின்னேரிப்பாளையம், சிவன்மலை, காடையூர், வெள்ளகோவில், கடைமடை ஆகிய பகுதிகளில் பாசன வசதிக்காக பரம்பிக்குளம் கால்வாய், கிளை வாய்கால் (வலது, இடது) மற்றும் பகிர்மானக் கால்வாய் (வலது, இடது) என பிரிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி, உடுமலை, கிணத்துக்கடவு, பல்லடம், திருப்பூர், சூலூர், தாராபுரம், காங்கயம், வெள்ளகோயில் என 8 சட்டபேரவைத் தொகுதிகளில் உள்ள 3 லட்சத்து 16 ஏக்கர் விவசாய நிலங்களின் இதயதமனியாக உள்ளது. தற்போது இந்த கால்வாய் போதிய பராமரிப்பின்றி பல இடங்களில் கரைகள் சிதிலமடைந்தும், கட்டுமான கற்கள் பெயர்ந்து விழுந்தும், கால்வாயின் உட்பகுதியில் இடிபாடுகள் குவிந்து உள்ளன.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

திருமூர்த்தி அணை பாசன விவசாயிகள், கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு முறையும் தங்களுக்கு உரிய தண்ணீரை போராட்டம் நடத்தியே பெற்று வருகின்றனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய் பல இடங்களில் கரைகள் பலவீனம் அடைந்தும், கட்டுமான கற்கள் கால்வாயின் உள்ளே சரிந்தும், பராமரிப்பின்றி சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சேதாரமின்றி முழுமையாக கிடைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்து பரம்பிக்குளம் பிரதான கால்வாயை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து பிஏபி திட்ட கண்காணிப்பு பொறியாளர், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பரம்பிக்குளம் பிரதான கால்வாயின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் முன்னுரிமை கொடுத்து சீரமைக்கப்பட வேண்டிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. கால்வாயின் 1.2 வது கி.மீ முதல் 3 வது கி.மீ வரை இருபுறமும் 5.கி.மீ. நீளத்துக்கு சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட வேண்டும். அதற்காக ரூ.43 கோடி மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்கப்பட்டு,அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்ததும் விரைவில் பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x