Published : 17 Mar 2018 05:10 PM
Last Updated : 17 Mar 2018 05:10 PM

ஈக்காட்டுத்தாங்கலில் நகை திருட்டு: 300 சவரனில் பதற்றத்தில் பாதியை மட்டும் திருடிச் சென்ற நபர்கள்

ஈக்காடுதங்கலில் பட்டப்பகலில் மூதாட்டி வீட்டில் நகை திருடிய நபர்கள் 300 சவரன் நகையில் பதற்றத்தில் 150 சவரன் நகையை மட்டும் திருடிச் சென்றனர்.

சென்னை ஈக்காடுதாங்கல் அச்சுதன் நகர் 3-வது தெருவில் வசிப்பவர் அலுமேலு. தனது மகள் தனலட்சுமிக்கு சொந்தமான வீட்டில் அலமேலு வசித்து வருகிறார். மகள் தனலட்சுமி துபாயில் வசிக்கிறார். மற்ற மகள்களுடன் அதே வீட்டில் அலமேலு கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.

நேற்று காலை அலமேலு வெளியில் சென்றுள்ளார். அப்போது வீட்டில் மற்ற உறவினர்கள் இருந்துள்ளனர். வெளியே சென்ற அலமேலு சற்று நேரத்தில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வீட்டைத் திறந்து பார்த்த அலமேலுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் படுக்கையில் நகைகள் சிதறிக் கிடந்துள்ளன.

பாதி நகைகளைக் காணவில்லை என்று அதிர்ச்சியடைந்த அலமேலு பரண் மீது வைத்திருந்த நகை எப்படி படுக்கையில் சிதறிக் கிடக்கிறது என்று பார்த்துள்ளார். அப்போது பரணில் வைத்திருந்த 300 சவரன் நகையில் 150 சவரன் வரை திருடு போயிருப்பதும், மீதமுள்ள நகைகள் படுக்கையில் சிதறிக் கிடப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் ரூ. 2 லட்சம் ரொக்கப் பணம் வைத்திருந்ததாகவும் அதை திருடர்கள் எடுக்கவில்லை, நகையை மட்டுமே திருடிச் சென்றதாக அலமேலு கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருட்டு குறித்து கிண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அலமேலு வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாயும் அழைத்து வரப்படட்டது. வீட்டைச் சுற்றி 5 சிசி.டிவி கேமராக்கள் உள்ளன. அதன் காட்சிப் பதிவுகளை எடுத்த போலீஸார் அதை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசி டிவி காட்சிகளில் வீட்டுக்குள் சந்தேகப்படும்படி யாரும் உள்ளே சென்று வெளியே வருவது போன்ற பதிவு இல்லை. மேலும் அலமேலு தங்கி இருக்கும் வீட்டில் முதல் தளத்தில் நான்கு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருப்பதாலும் வெளியிலிருந்து புதிய நபர்கள் உள்ளே வராததாலும் குடித்தனம் இருப்பவர்களையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மொத்த நகைகளையும் எடுக்காமல், பதற்றத்தில் பாதி நகைகளை மட்டுமே எடுத்துச்சென்றிருப்பதும், பணம் ரூ.2 லட்சத்தை எடுக்காமல் சென்றிருப்பதையும் வைத்து பார்க்கும்போது தொழில்முறை திருடர்கள் யாரும் திருடியது போல் தெரியவில்லை, உறவினர்கள் அல்லது வீட்டில் வசிக்கும் நபர்களே எடுத்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x