Published : 17 Mar 2018 04:11 PM
Last Updated : 17 Mar 2018 04:11 PM

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி

 போரூரில் சாலையில் வைத்து இளைஞர்களைத் தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வீட்டிற்கே நேரில் சென்று போலீஸார் மன்னிப்பு கேட்டு சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை போரூர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 3 பேரை மடக்கிய போரூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பாபு என்பவர் அவர்களை சாலையில் வைத்து சரமாரியாகத் தாக்கினார். பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட இளைஞர்கள் அவமானத்தால் குறுகி நின்றனர்.

அவர்களைத் தாக்கிய பின்னர் அவர்களிடம் இருந்து செல்போனையும் பாபு பறித்துக்கொண்டார். இது குறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நட்டநடு சாலையில் பொதுமக்கள் பலர் முன்னிலையில் காவலர் ஒருவர் இளைஞர்களைத் தாக்கும் சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துப் பகிர்ந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதைப் பார்த்த பலரும் காவல்துறையைக் கண்டித்தனர். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மனநிலை என்ன ஆகும் என்ற கண்டனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து விசாரிக்க ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

விசாரணையில் காவலர் மீது தவறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீட்டுக்குச் சென்று அந்தக் காவலரை மன்னிப்பு கேட்க ஆணையர் உத்தரவிட்டார்.

ஆணையரின் உத்தரவை அடுத்து ராமாபுரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீடுகளுக்கு அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் மற்றும் உதவி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் காவலர் பாபுவுடன் சென்றனர். மொத்தமாக போலீஸார் வந்ததைப் பார்த்த பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அவர்களிடம் பேச்சுகொடுத்த துணை ஆணையரும், உதவி ஆணையரும் 'பயப்படாதீர்கள், அன்று நடந்த சம்பவத்தில் எங்கள் காவலர் தவறிழைத்துள்ளார். பாதிக்கப்பட்ட தம்பிகளைப் பார்த்து தனது வருத்தத்தைக் கூறி மன்னிப்பு கேட்க வந்துள்ளார்' என்று கூறியுள்ளனர்.

ஒரு கணம் தங்களை மறந்த பெற்றோர் 'பரவாயில்லை சார்' என்று கூறியுள்ளனர். இல்லை. சம்பந்தப்பட்ட இளைஞர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க, கமிஷனர் உத்தரவு என்று அதிகாரிகள் கூறி 3 இளைஞர்களையும் அழைத்து வருமாறு கூறினர்.

பின்னர் அழைத்து வரப்பட்ட இளைஞர்களிடம், அதிகாரிகள் முன்னிலையில் காவலர் பாபு மன்னிப்பு கேட்டு, 'எதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்' என்று கூற நெகிழ்ந்து போன அந்த இளைஞர்கள் சார் நாங்கள் அதை அன்றே மறந்துவிட்டோம். எங்களுக்கு ஒரு அண்ணன் இருந்து கண்டித்தது போல் எடுத்துக்கொண்டோம் என்று கூறியுள்ளனர்.

ஆனாலும் காவலர் பாபு, 'நான் செய்தது தவறுதான், லைசென்ஸ் இல்லாவிட்டால் அதற்குரிய அபராதம் விதித்திருக்க வேண்டும், அவர்களை அடித்திருக்கக் கூடாது' என்று கூற, 'நாங்கள் தான் சார் லைசென்ஸ் இல்லாமல் வந்து விட்டோம் தவறு எங்களுடையது' என்று இளைஞர்கள் கூற நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வை பார்த்த அக்கம் பக்கத்தினரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.

அப்போது காவலர்களிடம் பேசிய இளைஞர்கள், 'நாங்கள் தவறு செய்து விட்டோம். இனி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டமாட்டோம்' எனக் கூறியுள்ளனர்.

இளைஞர்களுக்கு அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் புத்தகமும், இனிப்புகளும் அளித்த துணை ஆணையர் அறிவுரை வழங்கினார். பின்னர்,  காவலர் பாபுவிற்கு அந்த இடத்திலேயே உதவி ஆணையர் கண்ணன் ஆலோசனை வழங்கினார்.

தமிழகத்தில் பல இடங்களில் காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கிவிட்டுச் செல்லும் நிலையில், காவலரால் தாக்கப்பட்ட இளைஞர்களின் மனநிலை பாதிக்கப்படும், தனது தவறையும் ஒப்புக்கொள்ள மறுக்கும் அவர்கள் போலீஸாரை விரோதியாகவே பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து போலீஸாருக்கும் பாடமாக, அதே சமயத்தில் இளைஞர்களும் அவர்கள் தவறை உணரும் வண்ணம் அவர்கள் வீட்டிற்கே போலீஸ் உயரதிகாரிகள் சென்று வருத்தம் தெரிவித்தது நெகிழ்ச்சியானதாக அமைந்துள்ளது. போலீஸாரின் மனிதநேய செயலும் பாராட்டுக்கு உரியதாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x