Published : 10 Mar 2018 03:18 PM
Last Updated : 10 Mar 2018 03:18 PM

பயணி தவறவிட்ட பணப்பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்: நேர்மையைப் பாராட்டிய காவல் அதிகாரிகள்

ஆட்டோவில் பயணி தவறவிட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை ஆட்டோ ஓட்டுநர் நேர்மையாக ஒப்படைத்தார். அவரது செயலைப் பாராட்டி போலீஸ் அதிகாரிகள், சக ஓட்டுநர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

வியாசர்பாடி, சாமியார் தோட்டம் 3-வது தெருவில் வசிப்பவர், முத்துராஜ் (65). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். வறுமையான சூழ்நிலையிலும், வயதான காலத்திலும் தனது குடும்பத்தைக் காக்க வேண்டி ஆட்டோ ஓட்டி பிழைத்து வருகிறார்.

முத்துராஜ் வழக்கம் போல் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் ஒரு இளம்பெண் மற்றும் சிலர் சவாரிக்கு ஏறியுள்ளனர். பின்னர் அவர்களை ஆயிரம் விளக்குப் பகுதியில் இறக்கிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஆட்டோவின் பின் பகுதியில் ஒரு கருப்பு நிற பை இருப்பது தெரியவந்தது.

உடனே பையை திறந்து பார்த்துள்ளார். அதில் ரூ.14,500/- ரொக்கப்பணம், வங்கி ஏடிஎம் கார்டு மற்றும் மருத்துவமனை சான்றுகள் உள்ளிட்ட சில ஆவணங்கள் இருந்தன. மருத்துவ சிகிச்சைக்காக பணத்தைக் கொண்டுவந்த அந்தக் குடும்பம் தற்போது பையை தவறவிட்டு என்ன செய்யப்போகிறார்களோ என்று யோசித்த முத்துராஜ் இதை போலீஸில் ஒப்படைத்தால் எப்படியும் உரியவர்களிடம் சேர்த்து விடுவார்கள் என்று கருதி வீட்டிலிருந்து பையுடன் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற அவர் உதவி ஆணையர், மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகத்தில் பையை ஒப்படைத்து, நடந்தவற்றைக் கூறினார். உடனே, காவல் கட்டுப்பாட்டறை மூலம் ஆட்டோவில் பையைத் தொலைத்தது தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

போலீஸார் நடத்திய விசாரணையில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் தங்களது பையை ஆட்டோவில் தவறவிட்டது தொடர்பாக புகார் கொடுக்க வந்திருப்பது தெரியவந்தது.

உடனடியாக, ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீஸார் மற்றும் புகார்தாரர்களை ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து, ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜ் மூலம் புகார்தாரர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆமாம் இவர்கள் தான் காலையில் என் ஆட்டோவில் பயணம் செய்தார்கள் என்று முத்துராஜ் உறுதிப்படுத்தினார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், டார்ஜிலிங்கைச் சேர்ந்த சுமன் ஹெலா (23) என்பவர் மருத்துவ சிகிச்சைக்காக தனது உறவினர்களுடன் சென்னை வந்து, சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று வந்துள்ளது தெரிய வந்தது.

நேற்று காலை முத்துராஜ் ஆட்டோவில் பயணம் செய்து, ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனை அருகே இறங்கிச் செல்லும்போது, தனது பையை எடுக்காமல் மறந்துவிட்டு சென்றதும் தெரியவந்தது. அதன்பேரில், சுமன் ஹெலா தவறவிட்ட பை துணை ஆணையர் திருநாவுக்கரசு முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தவறவிட்ட பையை பத்திரமாக திரும்ப ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ டிரைவர் முத்துராஜுக்கு பாதிக்கப்பட்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.தனது ஆட்டோவில் பயணி தவறவிட்ட பையை காவல் ஆணையரகத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜின் நேர்மையை காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

பின்னர் வெளியே வந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜ் தனது ஆட்டோவை எடுத்தபோது விஷயம் அறிந்த செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுத்தனர். அப்போது சாலையில் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களும் தங்கள் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி வந்து முத்துராஜின் கையைக் குலுக்கி வாழ்த்து தெரிவித்து விட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x