Published : 07 Mar 2018 09:10 AM
Last Updated : 07 Mar 2018 09:10 AM

சென்னையில் நகைக்கடை மேல்தளம் வழியாக நுழைந்து ரூ.3 கோடி தங்க நகைகள் கொள்ளை: கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் தூக்கிச் சென்றனர்

திருமங்கலத்தில் நகைக்கடையின் மேல் தளத்தில் இருந்த இரும்புக் கதவை பெயர்த்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் போலீஸார் தங்களை எளிதில் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சி டிஸ்குகளையும் எடுத்துச் சென்றனர்.

சென்னை திருமங்கலம் நேரு நகரில் ஏ.கே.எஸ். ஜூவல்லரி என்ற பெயரில் 3 மாடிகளை கொண்ட நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படும். அதன்படி நேற்று முன் தினம் இரவு பூட்டப்பட்ட கடையை நேற்று காலையில் திறந்துள்ளனர். அப்போது நகைக்கடையின் 3 தளங்களிலும் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

கொள்ளையர்கள் அருகில் உள்ள கட்டிடத்தின் வழியாக ஏறி நகைக்கடையின் மேல்தளத்துக்குச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த பெரிய இரும்பு கிரில் கேட்டை உடைத்து கடைக்குள் நுழைந்துள்ளனர். இந்த நகைக்கடையின் கீழ் தளத்தில் தங்க நகைகளும், முதல் மாடியில் வெள்ளிப் பொருட்களும், 2-வது மாடியில் ராசிக்கல் பதித்த நகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. 3-வது மாடியில் கடைகளுக்கு தேவையான பொருட்களை வைத்திருந்தனர். இதில் ரூ.3 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடையில் இருந்த ரூ.7 லட்சத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். நகைகளைக் கொள்ளையடித்தவர்கள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் அடங்கிய டிஸ்குகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். முன்னதாக சிசிடிவி கேமராக்களை வேறு திசை நோக்கி திருப்பி வைத்துள்ளனர்.

தனிப்படைகள் அமைப்பு

கொள்ளை பற்றி தகவல் அறிந்ததும் திருமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நகைக்கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொளத்தூரை அடுத்த ரெட்டேரியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று மூன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கொள்ளையன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் ஈடுபட்டது தெரியவந்தது. ராஜஸ்தானில் அவர்களை பிடிக்கும் முயற்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஆய்வாளர் பெரிய பாண்டியன் பலியானார். பின்னர் ராஜஸ்தான் போலீஸாரின் உதவியுடன் நாதுராமும், அவனது கூட்டாளிகளும் பிடிபட்டனர். அந்த கொள்ளை சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் திருமங்கலத்தில் அதே பாணியில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடையைச் சுற்றி குடியிருப்புகள் எதுவும் கிடையாது. தனியார் நிறுவனம் மற்றும் அலுவலகங்கள் மட்டுமே உள்ளன. இரவு நேரத்தில் அந்த அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும் அதனால்தான் கொள்ளையர்கள் இரும்பு கதவுகளை உடைக்கும் சத்தம் கேட்டு யாரும் அங்கு வரவில்லை. மேலும், நகைக்கடையில் இரவு காவலாளிகளும் இல்லை என கூறப்படுகிறது. கொள்ளை நடந்த விதத்தை பார்க்கும்போது 3 முதல் 5 கொள்ளையர்கள் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்ளை போனது எட்டரை கிலோ தங்கமா அல்லது 10 கிலோ தங்கமா என்பதைப் பற்றி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x