Published : 05 Mar 2018 11:02 AM
Last Updated : 05 Mar 2018 11:02 AM

சென்னை பல்கலைக்கழகத்தில் விழா: சைவ சித்தாந்தத்தை உலகளவில் பரப்ப வேண்டும் - உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வலியுறுத்தல்

சைவ சித்தாந்தத்தை தமிழர்கள் உலகஅளவில் கொண்டுசெல்ல வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வலியுறுத்தினார்.

சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறை சார்பில்`காலம்தொட்டு சைவ சித்தாந்தத்தின் வளர்ச்சி‘ என்ற தலைப்பிலான 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மானிட வாழ்க்கையானது அகவாழ்க்கை, புறவாழ்க்கை என இருவிதமான வாழ்க்கையை உள்ளடக்கியது. மனிதன் தன்னை அறிந்திட, அறியப்படாத வாழ்க்கையை அறிந்துகொள்ள சைவம் துணைநிற்கிறது. கிறிஸ்து பிறப் பதற்கு முன்பு 7 ஆயிரம், 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந் தைய அகழாராய்ச்சி சான்றுகளை ஆராய்ந்துப் பார்த்தால் தமிழர்களின் மேன்மையையும் சைவ சித்தாந்தத்தையும் அறிந்துகொள்ள முடியும்.

சைவ சித்தாந்தம் என்பது தமிழ் மண்ணுக்குரியது. அன்பே சிவம். அன்பைக் காட்டிலும் உலகில் பெரியது ஒன்றுமில்லை என்கிறது சைவம். அன்பு நிலையான சைவ சித்தாந்தத்தை தமிழகம் தாண்டி, உலக தளத்துக்குக் கொண்டுசெல்ல தமிழர்கள் தவறிவிட்டார்கள். சைவ சித்தாந்தத்தையும் அது தமிழ் மண்ணுக்குரியது என்பதையும் தமிழர்கள் உலக அளவில் கொண்டுசெல்ல வேண் டும்

இவ்வாறு நீதிபதி மகாதேவன் கூறினார்.

6 விதமான சமயங்கள்

துணைவேந்தர் பி.துரைசாமி தலைமையுரை ஆற்றிப் பேசும்போது, “சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தை ஒட்டி 12 சர்வதேச கருத்தரங்குகள், 8 தேசிய கருத்தரங்குகள் நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு, சைவம், வைணவம், இஸ்லாமிய கல்வி, கிறிஸ்துவக் கல்வி, ஜைனம் உட்பட 6 விதமான சமயங்கள் தொடர்புடைய துறைகள் இயங்குகின்றன.

இவ்வாறு சென்னை பல்கலைக்கழகம் மதச்சார்பின்மைக்கு அடையாளமாகத் திகழ்கிறது. பல்சமயத் துறைகள் மூலம் மாணவர்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லிக்கொடுத்து அவர்களைச் சிறந்த குடிமக்களாக உருவாக்கும் பணியில் இப் பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருகிறது” என்று குறிப்பிட்டார்.

நல்ல வாழ்க்கை

சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் வாழ்த்திப் பேசும்போது, “தத்துவங்கள் வேலை கிடைக்க உதவுமா? பணம் சம்பாதிக்க பயன்படுமா? என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தத்துவங்கள் பணம் சம்பாதிக்க உதவாமல் இருக்கலாம்.

ஆனால், வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள அவை உதவும். தத்துவம் என்பது சமயங்களுக்கு மட்டுமே உரியது அல்ல. ஆனால், சமயங்கள் தத்துவங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, சைவ சித்தாந்தத்துறையின் தலைவர் நன்னூல் சரவணன் வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார்.

நிறைவாக பேராசிரியர் பி.புகழேந்தி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x