Published : 02 Mar 2018 09:23 AM
Last Updated : 02 Mar 2018 09:23 AM

உத்திரமேரூர் கருணை இல்லத்தில் அனைவரும் இடமாற்றம்: காப்பகம் தொடர்ந்து நடைபெற ஆட்சியரிடம் பாதிரியார்கள் மனு

உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் தங்கியிருந்த அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த இல்லத்தை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் பாதிரியார்கள் மற்றும் அருட் சகோதரிகள் மனு அளித்துள்ளனர்.

உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் செயின் ஜோசப் மரிக்கும் தறுவாயில் உள்ளவர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த கருணை இல்லத்தில் 255 பேர் தங்கி இருந்தனர். இவர்களில் பலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள். இந்தக் கருணை இல்லத்தை அருட்தந்தை தாமஸ் நிர்வகித்து வந்தார்.

இந்தக் கருணை இல்லத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையால் திடீர் சர்ச்சை ஏற்பட்டது. இறந்தவர்களின் எலும்புகள் வெளிநாடுகளில் விற்கப்படுவதாகவும் சிலர் புகார் கூறினர்.

இது தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள் இந்த இல்லத்தில் இருந்தவர்களை வேறு இல்லங்களுக்கு மாற்றினர். சிலரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த இல்லத்தில் இருந்த அனைவரும் அங்கிருந்து மாற்றப்பட்டுவிட்டனர்.

தவறான புகார்

இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு மறை மாவட்ட பேராயர் நீதிநாதன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் மற்றும் அருட் சகோதரிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்கள் இந்த கருணை இல்லம் தொடர்பாக மனு ஒன்றையும் அளித்தனர். இந்த மனுவில் அவர்கள் கூறியுள்ள விவரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிப் பணிகளில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் அதிகம் பங்கெடுத்து வருகிறோம். அன்னை தெரசா வழியில் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் சேவை செய்து வருகிறோம். அந்த அடிப்படையில்தான் பாலேஸ்வரத்தில் உள்ள செயின் ஜோசப் மரிக்கும் தறுவாயில் உள்ளவர்களுக்கான காப்பகமும் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை நிர்வகித்து வரும் அருட்தந்தை தாமஸின் சேவையை பலர் பாராட்டியுள்ளனர்.

உள்நோக்கம் கொண்ட சிலரின் தவறான புகாரால் இந்த காப்பகத்தின் மீது அநீதியான முறையில் நெருக்கடிகளும், இடையூறுகளும் ஏற்படுத்தப்படுகின்றன. மனிதநேய அடிப்படையில் செய்யப்படும் சேவை கொச்சைப்படுத்தப்பட்டு, இந்த காப்பகத்துடன் தொடர்புடையவர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர்.

இந்த காப்பகத்தின் மீது கொடுக்கப்படும் நெருக்கடியை கிறிஸ்தவ மத கோட்பாட்டுக்கும் சேவைக்கும் எதிரானதாகவே நாங்கள் கருதுகிறோம். இதுபோன்ற நிகழ்வுகள் எங்களுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காப்பகம் அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெற உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x