Published : 02 Mar 2018 08:13 AM
Last Updated : 02 Mar 2018 08:13 AM

மனித நேயத்தின் அடையாளம்: ஸ்ரீஜெயேந்திரர் பற்றி ஸ்ரீவிஜயேந்திரர்

மனித நேயத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் ஸ்ரீ ஜெயேந்திரர் என்று காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காஞ்சி மடத்தின் பெரியவர் மனிதநேயத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். இவர் மனித நாகரீகத்தின் முழு உருவம். இந்து பக்தர்களின் ஒளிவிளக்கு. இந்தியாவில் இருக்கக் கூடிய பல மொழி, பல சமூகம், பல சமுதாயம், பல பொருளாதார நிலைகள் கொண்ட அனைத்து மக்களுக்கும் தனது ஆசிகளை வழங்கியவர்.

பல மொழி, மதங்களைக் கொண்ட இந்திய மக்களை அன்பால், அறத்தால் ஒருங்கிணைத்தவர். இந்தியாவுக்கே பெருமை சேர்ந்தவர். மக்களின் நாடியை அறிந்தவர். இந்த ஒளிவிளக்கு தற்போது இடம் பெயர்ந்துள்ளது. மக்கள் அவர் வழியில் நின்று இறை பக்தி செய்து, தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து அனைவருக்கும் நன்மையைச் செய்ய முற்பட வேண்டும் என்றார்.

ஸ்ரீ ஜெயேந்திரரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி, எல்.இ.டி. திரை மூலம் சங்கர மடத்துக்கு வெளிப்பகுதியில் ஒளிபரப்பப்பட்டது.

கோயில் மரியாதை

ஒவ்வொரு கோயிலில் இருந்தும் சிறப்பு அர்ச்சனைகள் செய்து பிரசாதம் கொண்டு வந்து அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், குமரகோட்டம் முருகன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், திருப்பதி தேவஸ்தானம், காலடி, மதுரை ஆகிய கோயில்களில் இருந்து பிரசாதங்கள் கொண்டு வரப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

தலைவர்கள் அஞ்சலி

மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் சதானந்த கவ, இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திரமோடி சார்பில் மலர் வளையமும் வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது:

காஞ்சி பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி அடைந்து இறைவனின் திருப்பாதத்தை அடைந்துள்ளார். சுவாமிஜி தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் தனது பயணத்தை மேற்கொண்டு ஒடுக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆசி வழங்கினார். அயோத்தி பிரச்சினையில் நடுநிலை வகித்துத் தீர்வுகாண முயற்சி மேற்கொண்டார். ஒட்டுமொத்த இந்தியாவின் அமைதி, மதநல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர். இறுதிச் சடங்கில் பங்கேற்க அமைச்சர் சதானந்த கவுடாவை பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிக்கு அனுப்பியுள்ளார். தமிழகத்தின் ஆளுநரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளார் என்றார்.

விவசாய சங்கத் தலைவர் பாண்டியன்: காஞ்சி மடத்தின் பெருமையை இவர் உலகறியச் செய்தார். தலித் மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்றார். அனைத்துப் பகுதி மக்களுக்கும் பாதுகாப்பாக இருந்தார் அவரது மறைவு தமிழகத்துக்கும், எங்கள் காவிரி டெல்டா பகுதிக்கும் பேரிழப்பாகும்.

முன்னாள் அமைச்சர் ஜாபர் செரீப், ஏ.கே.மூர்த்தி, ஆம் ஆத்மி கட்சி தமிழ் மாநில பொறுப்பாளர் வசீகரன், மடாதிபதிகள், கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x