Published : 23 Feb 2018 03:05 PM
Last Updated : 23 Feb 2018 03:05 PM

ஆந்திராவில் முதலீட்டாளர்கள் மூலம் ரூ.15 லட்சம் கோடி வரவு எதிர்பார்ப்பு; தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் கோடியை எட்டிப்பிடிக்க முடியவில்லை: அன்புமணி ராமதாஸ்

ஆந்திராவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.15 லட்சம் கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் கோடியைக்கூட எட்டிப்பிடிக்க முடியவில்லை என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2016-17ஆம் ஆண்டில் 0.86 விழுக்காடு குறைந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இது எதிர்பார்த்த ஒன்று தான் என்பதாலும், தமிழகத்தின் வளர்ச்சி குறையும் என்பதை பாமக ஏற்கனவே பலமுறை கூறியிருப்பதாலும் அதிர்ச்சி ஏற்படவில்லை.

2015-16ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.79% ஆக இருந்தது. இது 2016-17ஆம் ஆண்டில் 7.93% ஆக குறைந்து விட்டதாக நிதி ஆயோக் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில்மயமான மாநிலங்களில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் மட்டும்தான் குறைந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 7.80 விழுக்காட்டிலிருந்து 9.18 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மராட்டியம் மற்றும் ஆந்திர பொருளாதார வளர்ச்சி விகிதங்களும் கணிசமாக அதிகரித்துள்ளன. ஆனால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மட்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி முடங்கியதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

2016-17 ஆம் ஆண்டில் தமிழகத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி 7.10 விழுக்காட்டில் இருந்து 1.64% ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இது தான் மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஒரு மாநிலம் தொடர்ச்சியாக சில ஆண்டுகளுக்கு இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சியை எட்டினால், ஒரு கட்டத்தில் வளர்ச்சி விகிதம் சற்று குறையும்.

ஆனாலும், ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு வளர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும். இதுதான் இயல்பு. எனவே, பொதுவாக பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைவதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. மாறாக, பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை அம்சங்கள் வலிமையாக இருந்தால் போதும். ஆனால், தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படைகள் வலிமையாக இல்லாததே கவலையளிக்கிறது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்புக்கு (GSDP) பங்களிக்கும் 3 துறைகளில் முதன்மைத் துறையான வேளாண்மைத் துறையின் கடந்த பல ஆண்டுகளாக எதிர்மறையாகவே(மைனஸ்) உள்ளது. உற்பத்தித் துறையின் வளர்ச்சி நிலையற்றதாக இல்லை. ஒரு முறை உற்பத்தி வளர்ச்சி அதிகரித்தால் இருமுறை குறைகிறது.

சேவைத்துறை மட்டும் தான் தொடர்ச்சியாக ஓரளவு வளர்ச்சியடைந்து வருகிறது. உற்பத்தித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் ஊழலும், நிர்வாகத் திறமையின்மையும் தான். தமிழகத்தில் நிலவும் ஊழலால் தமிழகத்தில் தொழில் தொடங்க எவரும் முன்வருவதில்லை. உதாரணமாக, கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர அரசு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்திருக்கிறது.

நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.15 லட்சம் கோடி முதலீடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி அளவுக்கு கூட தமிழகம் தொழில் முதலீட்டை ஈர்க்கவில்லை என்பது தான் உண்மை.

அதுமட்டுமின்றி, தமிழகத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு மாறி வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் தமிழகத்தில் வலிமையான தொழில் கொள்கையோ, கட்டமைப்புகளோ இல்லை; ஊழல் மட்டும் மலிந்து கிடக்கிறது என்பது தான் உண்மை. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்காமல் தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதோ, உற்பத்தித்துறை வளர்ச்சியை பெருக்குவதோ சாத்தியமல்ல.

அதேபோல், பாசனக் கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் வேளாண்துறையையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல முடியாது. இந்த உண்மைகளை அரசோ, பொருளாதார வல்லுனர்களோ மறுக்க முடியாது.

அரசு நிர்வாகத்திலும் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. அதனால் அரசின் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், வருவாய் குறைந்து வருகிறது. 2007-08 முதல் 2012-13 வரையிலான ஐந்தாண்டுகளில் எட்டப்பட்ட வளர்ச்சியை தொடர்ந்து அதே நிலையில் நீடித்திருந்தால், 2017-18ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் ரூ.1,64,793.90 கோடியாக அதிகரித்திருக்க வேண்டும்.

ஆனால், 2017-18ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.99,590 கோடி என்ற இலக்கை எட்டுவதே கடினம் என்று தோன்றுகிறது. அரசின் சொந்த வரிவருவாய், எதிர்பார்க்கப்பட்டதைவிட, சுமார் ரூ.67,000 கோடி குறைந்திருப்பதையே இது காட்டுகிறது. இதேநிலை தொடர்ந்தால் தமிழகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தில் என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது.

தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழகப் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்த வேண்டுமானால், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஊழலை ஒழித்தல், அரசு நிர்வாகத்தை முற்றிலுமாக சீரமைத்தல் ஆகியவை தான் ஒரே தீர்வாகும். இந்த ஆட்சியில் இதற்கு வாய்ப்பில்லை என்பதால் ஆட்சி மாற்றமும், தொலைநோக்கு கொண்ட புதிய அரசும் தான் தமிழகத்தை முன்னேற்றும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x