Published : 23 Feb 2018 09:08 AM
Last Updated : 23 Feb 2018 09:08 AM

ஏர்செல் திண்டாட்டம்: போட்டி நிறுவனங்கள் கொண்டாட்டம்

ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் இணைப்புகள் செயல் இழந்ததால் 2-வது நாளாக நேற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த நிலையில், ஏர்செல் வாடிக்கையாளர்களைக் கவர பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டன.

தொலைத் தொடர்புத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏர்செல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக ஏர்செல் இணைப்புகள் செயலிழக்கத் தொடங்கின.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக ஏர்செல் சேவை முற்றிலுமாக முடங்கியது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஏர்செல் சேவை செயலிழந்ததால், பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர். அவர்கள் ஏர்செல் அலுவலகங்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கோவை அண்ணா சிலை அருகேயுள்ள ஏர்செல் அலுவலகத்தில் 2-வது நாளாக நேற்றும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டு, தங்களது ஏர்செல் இணைப்பை துண்டித்து, அதே எண்ணைக் கொண்டு வேறு நிறுவன இணைப்பைப் பெற முயற்சித்தனர்.

இதையொட்டி, ஏர்செல் நிறுவனம் சார்பில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டு, ஏர்செல் இணைப்பைத் துண்டிக்கும் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கள் விவரம் பெறப்பட்டு, இணைப்பை வேறு நிறுவனத்துக்கு மாற்றித் தரும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறும்போது, ‘ஏர்செல் இணைப்புகளை துண்டித்துவிட்டு, வேறு நிறுவன இணைப்பைப் பெற முயற்சிக்கிறோம். எனினும், உடனடியாக இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டதால், பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளோம்’ என்றனர்.

ஏர்செல் அலுவலக ஊழியர்கள் கூறும்போது, ‘வேறு நிறுவனத்துக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்களை நாங்கள் தடுக்கவில்லை. அவர்களது இணைப்பைத் துண்டித்து, வேறு நிறுவனத்துக்கு மாற உதவுகிறோம். பல்லாயிரக்கணக்கானோர் இணைப்பைத் துண்டிக்க விரும்புவதால், இந்த நடைமுறையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

இதற்கிடையில், ஏர்செல் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடாபோன் நிறுவனங்கள், ஏர்செல் நிறுவன அலுவலகத்தின் எதிரிலேயே தற்காலிக கடைகளை அமைத்து, புதிய இணைப்புகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஏர்செல் நிறுவனத்தின் இணைப்பை துண்டித்துவிட்டு வரும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு விருப்பமான நிறுவனத்தின் இணைப்பைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர். எனினும், புதிய நிறுவனத்தின் இணைப்பு கிடைக்க குறைந்தபட்சம் 4 நாட்களாகும் என்று தெரிவிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பிஎஸ்என்எல் சிறப்பு ஏற்பாடு

இதற்கிடையில், பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் நிர்வாகம் சார்பில் சேவை மாற்றத்துக்கான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டன.

இது குறித்து பிஎஸ்என்எல் பொள்ளாச்சி கோட்ட மேலாளர் தனசேகர் கூறும்போது, ‘வழக்கமாக தினமும் 100 சிம் கார்டுகள் வரை விற்பனையாகும். ஏர்செல் நிறுவன சேவை பாதிக்கப்பட்டதால் நேற்றுமுன்தினம் 500-க்கும் மேற்பட்டோர் சேவை மாற்றத்துக்காக அணுகினர். மக்களின் நலன் கருதி தற்போது அனைத்துப் பிரிவு ஊழியர்களும் புதிய சிம் கார்டு வழங்கும் பிரிவில் பணியாற்றுகின்றனர். கூடுதலாக 10 ஆயிரம் சிம் கார்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதற்காக 5 சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x