Published : 23 Feb 2018 08:52 AM
Last Updated : 23 Feb 2018 08:52 AM

உத்திரமேரூர் கருணை இல்லத்தை மூட நடவடிக்கை எடுத்தால் 4 இல்லங்களில் இருப்பவர்களை ஒப்படைப்போம்: நிர்வாகிகள் கூறியதாக தகவல்

உத்திரமேரூர் அடுத்த பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தை மூடும் நடவடிக்கைகள் எடுத்தால் இரும்புலியூர், திண்டுக்கல், வேலூரில் சித்தூர் கூட்டுச் சாலை, விழுப்புரம் மாவட்டம் புளிச்சப்பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 இல்லங்களில் உள்ளவர்களையும் ஒப்படைத்துவிடுவோம் என்று இல்லத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளதாகக் தெரிகிறது.

அவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அவ்வளவு பேரையும் வைத்துப் பராமரிப்பது என்பது பெரிய சிக்கலாக முடியும். பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் உள்ள 350 பேரை வைத்துப் பராமரிக்கவே சிரமம் என்பதால் இந்தக் கருணை இல்ல விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற வகையிலேயே பல்வேறு அலுவலர்கள் கருத்து தெரிவித்தனர். இந்தக் கருணை இல்லம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர் ராஜு பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கருணை இல்லத்தில் நடைபெற்ற விதிமீறல்கள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வைத் தொடர்ந்து கருணை இல்ல நிர்வாகி தாமஸ் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது, “இந்த இல்லம் இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கான சேவை இல்லம். சேவை மனப்பான்மையுடன் இதனை நாங்கள் நடத்தி வருகிறோம். சிலர் உதவி செய்வதன் மூலம் இதனை எங்களால் நடத்த முடிகிறது.

எங்களிடம் வருபவர்கள் சுய நினைவில்லாமல் வருகின்றனர். இங்கு நாங்கள் அவர்களுக்கு உணவளித்து, சிகிச்சை அளித்து பராமரிக்கிறோம். அதன் பிறகு குணமடைந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியவர்களை அனுப்பி வைக்கிறோம். நாங்கள் சரியான முறையில் இல்லத்தை நடத்தி வருகிறோம்” என்றார்.

தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் அமைப்பாளர் கோ.ரா.ரவி கூறும்போது, “பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இறப்பவர்களை மண்ணில் புதைப்பதோ, எரியூட்டுவதோ கிடையாது. மர்மமான முறையில் சுவற்றில் வைத்து மூடுகின்றனர். ஏன் இது போன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

இதற்கிடையில் இரும்புலியூர் கிராமத்தில் இருந்து வேனில் எடுத்து வரப்பட்டு சர்ச்சைக்குள்ளான விஜயகுமார் சடலம் உடற்கூறு ஆய்வுகள் முடிந்து கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x