Published : 23 Feb 2018 08:45 AM
Last Updated : 23 Feb 2018 08:45 AM

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் கனடா, அமெரிக்காவுக்கு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பிவைப்பு

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் சென்னையில் இருந்து கனடா மற்றும் அமெரிக்காவுக்கு திருவள்ளுவர் சிலைகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் `உலகை தமிழால் உயர்த்துவோம்’ என்ற நோக்கத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், உலக நாடுகளிலும் 31 திருவள்ளுவர் சிலைகள் இலவசமாக நிறுவப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக கனடா நாட்டில் ஸ்காபரே சைவ மண்டபத்திலும், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் மிடில் வில்லேஜ் பகுதியில் உள்ள தமிழ்க் கோயில் வளாகத்திலும் திருவள்ளுவர் சிலைகள் அமைக்கப்பட உள்ளன. அந்த சிலைகள், அடையா றில் உள்ள எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வழியனுப்பும் விழா நேற்று நடைபெற்றது. இதில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி.சந்தோசம் பங்கேற்று திருவள்ளுவர் சிலைகளை வழியனுப்பி வைத்தார். முன்னதாக அவர் பேசியதாவது:

எங்கள் நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழ் திருவிழாக்களை நடத்துவோம். ஒரே இடத்தில் ஆயிரம் குழந்தைகளுக்கு பாரதியார் வேடம் அணிவித்து விழா எடுப்போம். அதன் தொடர்ச்சி யாக உலகம் முழுவதும் தமிழை பரப்ப, உலகத் தமிழ்ச் சங்கத்தை தொடங்கினோம். தொழில் மூலமாக உலகம் முழுவதும் தொடர்பு இருந்தது தமிழை பரப்புவதற்கு உதவியாக இருந்தது. அதற்கு பிடிமானமாக திருவள்ளுவர் சிலையை வைக்க நடவடிக்கை எடுத்தோம்.

முதன் முதலில் ரிஷிகேஷில் திருவள்ளுவர் சிலையை வைத்தோம். அதன்பிறகு மலேசியா, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சண்டிகரில் திருவள்ளுவர் சிலை நிறுவ கேட்டுள்ளனர். அதற்கு விரைவில் அளிக்க இருக்கிறேன். யாருக்கு சிலை வேண்டுமானாலும் இந்த அமைப்பு இலவசமாக வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குர் கோ.விசயராகவன், இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர், அமெரிக்க தமிழ்ச்சங்கத் தலைவர் பிரகாஷ் சாமி, எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் அபிதா சபாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x