Published : 23 Feb 2018 07:50 AM
Last Updated : 23 Feb 2018 07:50 AM

மானிய விலை ஸ்கூட்டர் வாங்க ஹெல்மெட் வைத்திருப்பது கட்டாயம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் பணியில் உள்ள பெண்களுக்கு ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற ஹெல்மெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே 50 சதவீத மானிய திட்டத்தின்கீழ் இரு சக்கர வாகனம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த பி.ராமகுமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த பொதுநலன் மனு:

தமிழகத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் பிப். 24-ல் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம், இதில் குறைவான பணம் வழங்கப்படுகிறது.

இதனால் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.250 கோடி வரை செலவாகும். நடப்பாண்டில் ஒரு லட்சம் வாகனங்களுக்கு 3,36,104 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஏற்கெனவே இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் மீண்டும் இரு சக்கர வாகனம் பெறுவதைத் தடுக்க விதிகள் இல்லை. ஒருவர் இருசக்கர வாகனம் வாங்க ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை செலவிட தயாராக இருந்தால் அவர் பொருளாதார ரீதியில் வலுவான நிலையில் உள்ளவர். பொருளாதார ரீதியில் வலுவாக உள்ளவர்களுக்கு மானியம் வழங்குவது திட்டத்தின் நோக்கத்தை சீரழிப்பதாகும்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் சிறப்பு இரு சக்கரம் வாகனம் வழங்கி வருகிறது. இந்த திட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மானிய விலை யில் இரு சக்கர வாகனம் வழங்குவது சட்டவிரோதம்.

எனவே தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை முழுமையாக நீங்கும்வரை பழைய இலவச திட்டங்களை தொடரவும், புதிய இலவச திட்டங்களை அமல்படுத்தவும் கூடாது, அதுவரை 50 சதவீத மானிய விலைக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

இது நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும்போது, ‘அரசின் இலவச திட்டங்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி உள்ளது’ என்றார்.

இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மானிய விலையில் இரு சக்கர வாகன திட்டத்தின் பயனாளிகளுக்கு ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற ஹெல்மெட் வைத்திருப்பதை கட்டாயப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x