Published : 23 Feb 2018 07:47 AM
Last Updated : 23 Feb 2018 07:47 AM

சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தாக்கியதால் அரசு பஸ் ஓட்டுநர் விஷம் குடித்தார்

நீதிமன்றத்துக்குச் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் நடந்தது. அப்போது, மறியல் செய்தவர்களை மீறி அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை சிலர் தாக்கினர். இதனால் மனவேதனை அடைந்த ஓட்டுநர் தற்கொலைக்கு முயற்சித்தார்.

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இதில் திருப்பத்தூர் சாலையில் இருந்து நீதிமன்றத்துக்குப் பிரிந்து செல்லும் புதூர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதை சீரமைக்கக்கோரி சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, இச் சாலையை சீரமைக்கக் கோரி சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டனர். சங்கத் தலைவர் பழனிசாமி, செயலர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் செயலர் எஸ்.குணசேகரன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் எம்.கந்தசாமி, தமாகா நகர தலைவர் செல்வரங்கன் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

பஸ் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டபோது, திருச்சியில் இருந்து பரமக்குடி செல்லும் அரசு பஸ்சை ஓட்டுநர் செல்வராஜ் வேகமாக இயக்கினார். அப்போது வழக்கறிஞர்கள் சிலர் எழுந்துச் சென்று ஓட்டுநரிடம் பேசினர். அப்போது, ஓட்டுநர் பஸ்ஸை இயக்கியதில், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் தங்கப்பாண்டியன் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதில் ஆத்திரமடைந்த மற்ற வழக்கறிஞர்கள் அரசு பஸ் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தனர். சிலர் ஓட்டுநரை தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர்களுடன் பேச்சு நடத்திய அதிகாரிகள், 15 நாட்களில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தனர்.

ஓட்டுநர் தற்கொலை முயற்சி

இந்நிலையில், பணி முடிந்து பரமக்குடி உடைக்குளத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற ஓட்டுநர் செல்வராஜ்(55), தான் பலர் முன்னிலையில் தாக்கப்பட்டதை நினைத்து மனவேதனை அடைந்தார். அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் இருந்தவர்கள் அவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x