Published : 22 Feb 2018 08:25 AM
Last Updated : 22 Feb 2018 08:25 AM

காவிரிப் பிரச்சினை... தமிழகம் இனி என்ன செய்ய வேண்டும்?- பட்டியலிடுகிறார் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

கா

விரி நதிநீர்ப் பங்கீடு மற்றும் நதிகள் இணைப்பு தொடர் பாக கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக நீதிமன்றங்களில் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார் திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். காவிரி தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிஇருக்கும் நிலையில், தீர்ப்பு குறித்தும் தீர்வுகள் குறித்தும் அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து நிறைய விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன, தீர்ப்பு சரியானதுதானா?

உச்ச நீதிமன்றம் 14.75 டிஎம்சி தண்ணீரை குறைத்ததற்கு சொல்லி இருக் கும் காரணங்கள் சரியானவையாக இல்லை. பெங்களூரு நகரம் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளதற்காக கூடுதலாக தண்ணீர் தருகிறோம் என்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், ஏற்கெனவே பெங்களூரு மாநகரம் நாளென்றுக்கு 140 கோடி லிட்டர் காவிரி நீரைப் பெற்று அதில் 52 சதவீதத்தை வீணாக்குகிறது என்று சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகம் கூறியுள்ளதை உச்ச நீதிமன்றம் பொருட்படுத்தவில்லை.

தண்ணீர் குறைப்புக்கு தமிழகத்தின் நிலத்தடி நீரை உச்ச நீதிமன்றம் காரணமாகச் சொல்லி இருப்பது சரியா?

தமிழகத்தின் காவிரிப் படுகையில் நிலத்தடி நீர் இருக்கிறது என்பதற்கு 1972-ம் ஆண்டு ஐநா நிறுவனம் கொடுத்த கணக்கையும் அதன் பின்னர் 1980-ல் இந்திய அரசு நிறுவனம் கொடுத்த கணக்கையும் சான்றாகக் காட்டிய உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தில் காவிரிப்படுகையில் கிடைக் கும் நிலத்தடி நீர் பற்றி கணக்கு இல்லை என்று கைவிரிக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானது.

மேலும் இந்த வழக்கு 802 கிமீ தூரம் உள்ள காவிரி நதிநீர்ப் படுகையில் தண்ணீரின் அளவு 740 டிஎம்சி என்று கணக்கிட்டு, நடுவர் மன்றத்திடம் தமிழகத்தின் சார்பில் 562 டிஎம்சி தண்ணீரும் கர்நாடகத்தின் சார்பில் 465 டிஎம்சி தண்ணீரும் கேட்டதற்கான வழக்கு. அதாவது, காவிரியில் ஓடி வரும் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான (Cauvery Water Dispute) வழக்குதானே தவிர, காவிரிப் படுகையின் நிலத்தடி நீரைப் (Cauvery Ground Water Dispute) பகிர்ந்து கொள்வதற்கான வழக்கு அல்ல.

மெட்ராஸ் மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கு கடந்த காலகட்டங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களும் துணை ஒப்பந்தங்களும் இன்றும் செல்லுபடியாகுமா?

சென்னை மாகாணமும் மைசூர் அரசும் 1892-ம் ஆண்டு கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின்படி பிரிட்டிஷ் அரசு, கிரிஃபின் என்ற ஆங்கிலேயரை நடுவராக நியமித்தது. 1910-ல் கண்ணம்பாடியில் மைசூர் அரசு 41.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டும்போது சென்னை மாகாண அரசு எதிர்ப்பு தெரிவித்தது. பின்பு இரண்டு அரசுகளும் 11 டிஎம் சி-க்கு அணையைக் கட்ட ஒப்புக்கொண்டு, அதையும் மீறி மைசூர் அரசு 41.5 டிஎம்சி-யில் அணையை கட்ட ஆரம்பித்தது.

இப்படியான சிக்கல் இருக்கும் போது அதைத் தீர்க்க 1924-ல் இரண்டாவது ஒப்பந்தம் போட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1929, 1933 ஆகிய ஆண்டுகளில் சில பிரச்சினைகள் குறித்து துணை ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

1929 ஒப்பந்தத்தின்படி கிருஷ்ணராஜசாகர் அணையும் சென்னை மாகாண மேட்டூர் அணை திட்டத்தையும் நிறைவேற்ற ஒப்புக் கொள்ளப்பட்டது. நாடு விடுதலைக்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு தமிழகத்தின் கொள்ளேகால், கோலார், குடகு பகுதிகள் கர்நாடக மாநிலத்துக்குச் சென்றுவிட்டன. இந்த ஒப்பந்தங்களுமே காலாவதி ஆகிவிட்டன என்று கர்நாடகம் சொல்லி வந்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல் 1892, 1924 ஒப்பந்தங்கள் மற்றும் 1929, 1933 துணை ஒப்பந்தங்கள் ஆகியவை செல்லும் என்றும் தீர்ப்பளித்துவிட்டது.

இதனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தமிழகத்தின் உரிமைகளை சீராய்வு மனுவின் மூலமாக என்னென்ன உரிமைகளை மீட்க முடியுமோ, அதை மீட்க தமிழக அரசு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகவில்லை என்பது தமிழகத்துக்கு கிடைத்த பாதுகாப்பாகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தீர்ப்பு கட்டாயமாக்கி இருக்கிறது, மேலாண்மை வாரியம் உண்மையிலேயே பயன் தருமா?

மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டாலும் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, சாரங்கி, கபினி ஆகிய 4 அணைகளின் நிர்வாகமும் வாரியத்தின் கீழ் கொண்டு வந்தால் மட்டுமே அது நியாயமானதாக அமையும். இதேபோல தமிழகத்தின் மேட்டூர், பவானி சாகர், அமராவதி ஆகிய 3 அணைகளும் கேரளத்தின் பாணாகர சாகர் அணையும் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தீர்ப்பு வெளியான நாளிலிருந்து ஆறு வாரத்துக்குள் இந்தப் பணி முடிவாக வேண்டும். இதனையும் உச்ச நீதிமன்ற கவனத்துக்கு தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.

கர்நாடகம் மட்டுமின்றி, மத்திய அரசும் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஒத்துழைப்பு தரவில் லையே?

முதலில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று மேலாண்மை வாரியத்தை அமைப் போம் என்று உறுதியளித்த பின்பு அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியது. மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத்தை மாற்றி முன்வைத்தது.

பாஜக-வின் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செய்யும் வஞ்சகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பங்கீடு சட்டப்பிரிவு 6 (ஏ) கீழ் செயல்திட்டம் என்ற ‘ஸ்கீம்’ (Scheme) அமைப்பு முறையின் கீழ் தான் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் உருவாக்க முடியும் என்று வாதத்தையும் வைத்தது. மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்த் தகராறு சட்டப் பிரிவு 6(ஏ) தண்ணீர் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துவிட்டால், அதை செயல்படுத்த அதற்குரிய தனிப்பொறியமைவை (SCHEME) மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்பதில் ஆங்கிலத்தில் ‘May’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல், ‘அமைக்கலாம்’ என்ற பொருள் தருவதால், அதை மாற்றி ‘அமைக்க வேண்டும்’ எனப் பொருள் தரும் ‘Shall’ போட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியபோது, நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் ரஞ்சித்குமார், “அதைக் கட்டாயமாக்கி மாற்ற வேண்டாம், ‘May’ அப்படியே இருக்கட்டும், மத்திய அரசு பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார். இதுவும் தீர்ப்பில் வந்துள்ளது.

காவிரி நீரை அளவிடுவதில் தற்போதுள்ள நடைமுறை சரியானதா?

தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரியின் தண்ணீரை அளவெடுக்கிறார்கள். நியாயமாக பார்த்தால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் இடத்திலிருந்தே அளவிட வேண்டும். இதையும் சீராய்வு மனுவில் வலியுறுத்த வேண்டும். ஏனெனில், பிலிகுண்டுலுவில் இருந்து மேலே 70 கிமீ தொலைவு வரையுள்ள காவிரியின் மேற்குப் பகுதி தமிழகத்தின் எல்லையாகும். பிலிகுண்டுலுவில் இருந்து இயற்கையாக உற்பத்தியாகின்ற தண்ணீர் சிற்றாறுகளின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு, மாதேஸ்வரன் மலைப் பகுதியில் வரும் தண்ணீரையும் காவிரித் தண்ணீர் என்று கர்நாடகம் கணக்கு காட்டியது உண்டு. எனவே பிலிகுண்டுலுவைத் தவிர்த்து கர்நாடக அணைகளை கணக்கிட்டால் 15 முதல் 20 டிஎம்சி தண்ணீர் நமக்கு கிடைக்கும். இந்த நியாயத்தையும் கர்நாடகம் மறுக்கின்றது.

தீர்ப்பை அடுத்து மேகதாது உட்பட கர்நாடகம் காவிரியில் கட்டவிருக்கும் புதிய அணைகளின் நிலை என்ன?

கர்நாடகம் தற்போது மேகதாது, ராசி மணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் 4 பெரிய அணைகளைக் கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான அறிக்கைகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேகதாது அணையின் உயரம் 441.8 மீட்டர் [1546 அடி உயரம்]. அதில் 75 டிஎம்சி நீரை தேக்க முடியும். இது மேட்டூர் அணையின் கொள்ளளவை விட அதிகம். ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ள 3 அணைகள் மூலம் மேலும் 45 டிஎம்சி நீர் தேக்கப்படும். இதோடு தடுப்பணைகளையும் காவிரியின் குறுக்கே கட்ட திட்டங்களை தீட்டியுள்ளது. ஆனால், இந்த தீர்ப்பின் விளைவாக கர்நாடகம் புதிய அணைத் திட்டங்களை நிறைவேற்றவோ அதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவோ முடியாது.

தீர்ப்பால் தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் பாதிப்புகள் என்ன?

தமிழகத்தின் சாகுபடி பரப்பு மேலும் குறையும். 88,500 ஏக்கர் நெற்பயிர் விளைச்சல் கேள்விக்குறியாகும். காவிரி - வெண்ணாற்றிலிருந்து பிரியும் 36 கிளை ஆறுகள், ‘ஏ’ பிரிவு வாய்க்கால் மற்றும் சாதாரண வாய்க்கால்கள் என்பதெல்லாம் காணாமலே போகும் வாய்ப்பு உண்டு. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தில் தொய்வு ஏற்படும். ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலும் சிக்கல் ஏற்படும். ஆயிரக்கணக்கான ஏரிகள் நீர்வரத்து இல்லாமல் பாதிக்கும்.

வேறு எதுமாதிரியான தீர்வுகள் இருக்கின்றன?

டெல்டா மாவட்டங்களுக்கு மாற்று நீராதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். காவிரி படுகையில் தஞ்சை மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஆயக்கட்டு, குடிமராமத்து செயல்பாட்டை மேம்படுத்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். காவிரி உட்பட கர்நாடகத்தின் 13 ஆறுகளில் 2,000 டிஎம்சி தண்ணீர் அரபிக் கடலுக்குச் செல்கிறது. இந்த உபரி நீரை திருப்பினால் கர்நாடக அணைகளுக்கே கூடுதல் தண்ணீர் கிடைக்கும். உதாரணத்துக்கு, ஹேமாவதி அணைக்கே 200 டிஎம்சி தண்ணீர் திருப்பலாம்.

இன்று நடக்கவிருக்கும் அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் முக்கியமாக எதைப் பற்றி விவாதிக்க வேண்டும்?

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் விவாதிக்க வேண்டும். மேலும் சட்டப் பேரவையை அவசரமாகக் கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும். சீராய்வு மனுத்தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்க வேண்டும். தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடியை சந்தித்து ஒரே குரலாக காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மேலாண்மை வாரியம் தவிர்த்து தீர்ப்பில் நல்ல விஷயமே இல் லையா?

தீர்ப்பின் மூலம் காவிரியில் மணல் அள்ளுவதை தடுக்கலாம். ஏனெனில், காவிரி நதி மேலாண்மை வாரியத்தின் கைகளுக்கு சென்றுவிட்டால் தமிழக அரசு மணல் அள்ளும் உரிமையை தவறாகப் பயன்படுத்த முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x