Published : 21 Feb 2018 09:27 PM
Last Updated : 21 Feb 2018 09:27 PM

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது: கமல் திட்டவட்டம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது. இலவசம் இருக்காது என்று கமல்ஹாசன் பேசினார்.

மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சியின் பெயரை கமல்ஹாசன் இன்று அறிவித்தார்.

தொடர்ந்து கமல்ஹாசன் பேசியதாவது:

''எங்கள் தண்டவாளமும் உங்கள் வண்டவாளமும் வெளிவரும் நாள் இன்று. 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்த கூட்டத்தை நீங்கள் பார்த்தீர்கள். இன்று பேசும் நாள், நாளை செயல்படும் நாள்.

இங்கு பணத்திற்கு பஞ்சமில்லை, நல்ல மனதிற்குதான் பஞ்சம். எங்கள் நற்பணிகளுக்கு இடைஞ்சலாக சில அரசுகள் இருந்தன அதனை மறக்க மாட்டோம். நல்ல கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்றால் ஆண்டுக்கு ரூ.6000 இல்லை ரூ.6 லட்சம் கிடைத்திருக்கும். நாங்கள் சமூக சேவகர்களாக வந்துள்ளோம். செய்ய வேண்டியதை செய்தாலே போதுமானது.

கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு மது வியாபாரத்தை அரசு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. சாராயத்தை யார் வேண்டுமானாலும் விற்கலாம். கல்வியை அப்படி விடமுடியுமா? எல்லா தரப்பினருக்கும் தரமான கல்வி போய்ச் சேர வேண்டும்.

படித்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளார்கள். அதை மாற்ற முடியும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

சாதி, மதம் அறவே நீக்கப்பட வேண்டும். ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும். நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது; நீங்களும் வாருங்கள் சேர்ந்து ஊழலை ஒழிப்போம்.

எனக்கு வயது 63; நான் 40 வருட ஆட்சிக்காக வரவில்லை. மக்கள் நீதி மய்யத்தில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது. இலவசம் இருக்காது. ஆனால், மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித் தரும் பொருளாதாரத்தை ஏற்படுத்துவேன்'' என்று கமல் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x