Published : 20 Feb 2018 10:49 AM
Last Updated : 20 Feb 2018 10:49 AM

கமலின் அரசியல் பயணம் வெற்றிகரமாக புரட்சிகரமாக அமையட்டும்: சீமான் நேரில் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல் பயணத்தை தொடங்கவிருக்கும் நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ளது அவரது இல்லத்து நேரில் சென்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்வாழ்த்து தெரிவித்தார்.

தான் அரசியல் பயணத்தை துவக்குவதை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் தலைமை

தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை கமல்ஹாசன் நேரில் சந்தித்தார்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கமல்ஹாசனை சீமான் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சீமான், "எந்த வகையிலாவது தமிழகத்தில் மாற்றம் வராதா எனப் பலரும் ஏங்கிக் கொண்டிருக்கும் சூழலில் கமல்ஹாசன் நாளை அவரது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். அவர் என்னைவந்து சந்திப்பதைவிட நான் அவரை நேரில் சந்திப்பதே சரியாக இருக்கும் என்பதால் இங்கு வந்துள்ளேன். கமலின் பயணம் வெற்றிகரமாக புரட்சிகரமாக அமைய எனது வாழ்த்துகள். அரசியலில் அவருடன் இணைந்து செயல்படுவது குறித்து கமல்தான் முடிவு செய்ய வேண்டும். அரசியல் எண்ணம் இல்லாதவர் மனிதனே இல்லை என்கிறார் காந்தி. கமலின் அரசியல் பயணம் வெற்றி பெறட்டும்" என்றார்.

அதிமுகவில் யாரையும் அழைக்கப்போவதில்லை..

அதிமுகவில் யாரையாவது சந்திக்கப்போகிறீர்களா என்ற கேள்விக்கு, "அதிமுக ஆட்சியே சரியில்லை என்கிறேன் அப்புறம் எப்படி அதிமுக பிரமுகர்களை சந்திப்பேன்" என்றார்.

கமல்ஹாசன் கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அப்போது குறுக்கிட்ட கமல்ஹாசன் இந்தக் கேள்விக்கு மட்டும் நானே பதில் சொல்கிறேன் எனக் கூறிவிட்டு, "சீமானுக்கு என்னைத் தெரியும், எனது சினிமாவைத் தெரியும், எனது கொள்கையைப் பற்றி இப்போதே தெரிய வாய்ப்பில்லை. எனவே, எனது கொள்கையை முழுமையாக நான் வெளிப்படுத்திய பிறகு அவர் எடுக்க வேண்டிய முடிவு அது. இன்று, எனது அரசியல் பயணத்துக்கு வாழ்த்து கூறவே அவர் வந்திருக்கிறார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x