Published : 19 Feb 2018 08:33 AM
Last Updated : 19 Feb 2018 08:33 AM

திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியால் அதிர்ந்த அலகுமலை: லட்சக்கணக்கானோர் கண்டுகளிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை லட்சக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.

பொங்கல் திருவிழாவையொட்டி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் சங்கம் சார்பில், அலகுமலை அடிவாரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் ஏ.பி.நாகராஜன், வி.சத்தியபாமா, சி.மகேந்திரன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.எல்.ஏ.க்கள் நடராஜன், சு.குணசேகரன், உ.தனியரசு, கே.என்.விஜயகுமார் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் பி.ராஜசேகர் உட்பட பலர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை, மத்திய பார்வையாளர் மிட்டல் கண்காணித்தார்.

ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிப்பை வீரர்கள் வாசிக்க போட்டி தொடங்கியது.

பரிசுப் பொருட்கள்

காங்கயம், உம்பளச்சேரி உட்பட பிரசித்தி பெற்ற காளைகள் பங்கேற்றன. மேலும் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், 700-க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றன. பீரோ, கட்டில், அண்டா, எலெக்ட்ரிக் அடுப்பு, வெள்ளிக் காசு, ஏர்கூலர், மின் மோட்டார், குடம், ஹாட்பாக்ஸ் உட்பட ஆயிரக்கணக்கான மதிப்பிலான பரிசுப்பொருட்கள், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க இயலாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

எல்.இ.டி. திரைகள்

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 6 எல்.இ.டி. அகண்ட திரைகளில் பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். விடுமுறை நாள் என்பதால், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டியை கண்டு ரசித்ததாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x