Published : 19 Feb 2018 08:14 AM
Last Updated : 19 Feb 2018 08:14 AM

அதிமுக அரசை வீழ்த்த தயாராகிவிட்டதா பாஜக?- எதிர்க்கும் ஓபிஎஸ்.. வலுக்கும் மோதல்

அதிமுக அரசை வீழ்த்த பாஜக தயாராகிவிட்டதை தெரிந்து கொண்டுதான் அக்கட்சிக்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலும் ஆட்சி நிர்வாகத்திலும் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. தலைமைச் செயலகத்தில் வருமானவரித் துறை சோதனை, சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி, இரட்டை இலை சின்னம் முடக்கம், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, அதிமுக அணிகள் இணைப்பு, ஓபிஎஸ் துணை முதல்வரானது, முதல்வர் பழனிசாமி- ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு என அடுத்தடுத்து நடந்துவரும் மாற்றங்களுக்கு பாஜகவே காரணம் என டிடிவி தினகரனும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின.

கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதன்பிறகு பிரதமர் மோடிக்கு நெருக்கமான பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் பலவீனமான தலைவர்கள். தங்கள் தலைவரின் பாதத்தை எப்படி தொட்டு வணங்குவது என்பதையும், அவர்களுக்காக எப்படி லஞ் சம் வசூலிப்பது என்பதையும் மட்டுமே இதுவரை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்’ என விமர்சனம் செய்தார். இதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பாஜக - அதிமுக உறவில் உரசல் ஏற்படத் தொடங்கியது.

அதிமுக அணிகள் இணைந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் விரிசல் பெரிதாகி மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 18-ம் தேதி பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற ஓபிஎஸ், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவு முயன்றும் அவரால் மோடியை சந்திக்க முடியவில்லை. அணிகள் இணைப்புக்கு முன்பாக 5 முறை மோடியை ஓபிஎஸ் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் ஆளுநராகப் பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித் அரசுக்கு ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதும் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் இருவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இருவரும் எதையும் வெளிப்படையாகப் பேசாமல் அமைதியாக இருந்து வந்தனர்.

கடந்த 14-ம் தேதி கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘தமிழகம் அமைதிப்பூங்காவாக இல்லை. பயங்கரவாதிகளின் பயிற்சிக் களமாக மாறிவிட்டது’ என குற்றம்சாட்டினார். இதை மறுத்த ஓபிஎஸ், ‘‘பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’’ என ஆவேசமாக பதிலளித்தார். கடந்த 16-ம் தேதி தேனியில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், ‘‘பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாலேயே முதல்வர் பழனிசாமியுடன் இணைந்தேன். துணை முதல்வர் பதவியையும் ஏற்றுக்கொண்டேன்’’ என தெரி வித்திருந்தார்.

அதிமுகவில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரதமர் மோடிதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை உறுதிப்படுத்தி ஓபிஎஸ் பேசியது அதிமுக, பாஜக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சியில் மோடியின் தலையீடு இருந்தது என்பதை வெளிப்படுத்தவே ஓபிஎஸ் அவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பாஜக - ஓபிஎஸ் மோதல் பகிரங்கமாகியுள்ளது.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. அதிமுக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் வரத் தொடங்கியுள்ளன. எனவே, அதிமுக ஆட்சியை வீழ்த்த பாஜக தயாராகி விட்டதாகவும், இதை தெரிந்துகொண்டதாலேயே பாஜகவை விமர்சித்து ஓபிஎஸ் பேசத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக - ஓபிஎஸ் மோதல் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x