Published : 17 Feb 2018 01:49 PM
Last Updated : 17 Feb 2018 01:49 PM

மோடி அறிவுரையின் பேரில்தான் அதிமுகவின் இரு அணிகளை இணைக்க ஒப்புக்கொண்டேன்: ஓபிஎஸ்

 பிரதமர் மோடி கூறியதால்தான், அதிமுகவின் இரு அணிகளை இணைக்க ஒப்புக்கொண்டதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, ஓபிஎஸ் பதவி விலக நேரிட்டது. ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி தனியாகப் பிரிந்தார். சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில்  தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு அணிகளாகப் பிரிந்தது. ஈபிஎஸ் அணிக்கு டிடிவி தினகரன் துணைப்பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டார். பின்னர் டிடிவி தினகரனை நீக்கியதாக தெரிவித்தனர். அதிமுகவினர் ஓபிஎஸ் வந்தால் வரவேற்போம் என்று பேட்டி அளித்திருந்த நிலையில் திடீரென அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன.

அதிமுகவை பின்னிருந்து பாஜக இயக்குவதாகவும் மோடியின் வழிகாட்டுதல்படியே அதிமுக இயங்குவதாக டிடிவி தினகரனும், எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினர். ஆனால் அதை ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் மறுத்து வந்தனர். இந்நிலையில் உண்மை என்ன என்பதை ஓபிஎஸ் பகிரங்கமாக தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாகப் பேசியதாவது:

''பிரதமர் மோடி அறிவுறுத்தியதாலேயே அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன். தர்மயுத்தம் தொடங்கும்போது கூறியது ஒரு சதவிகித தகவல், கோபம் வரும்போதெல்லாம் மீதமுள்ள 99 சதவிகித தகவல்களும் வெளிவரும்.

சசிகலா குடும்பத்தினர் கடும் நெருக்கடிகளை அளித்தனர், என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள், அல்லது ஊரைவிட்டே ஓடியிருப்பார்கள்

நான் தவறான, அநாகரிகமான வேலை செய்து அரசியலுக்கு வரவில்லை. என்னை மீண்டும் டீ ஆற்ற அனுப்பப் போவதாக தினகரன் பேசி வருகிறார். போட்ட துணியோடு ஊருக்குப் போகச் செய்வேன் என சசிகலா கூறுகிறார். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

கட்சி அணிகள் பிரிந்திருந்த நிலையில் பிரதமர் மோடியிடம் பேசினேன், நான் சென்னை வந்த போது கட்சி குறித்து பல தகவல்களை பேசினார், ஆகையால் நான் சொல்கிறேன் நீங்கள் கட்சியில் இணைந்து விடுங்கள் என்று தெரிவித்தார்.

கட்சியில் இணைந்து விடுகிறேன் அமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம் என்று தெரிவித்தேன். அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.''

இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

மோடி அறிவுரையின் பேரில்தான் தனது அணியை இணைத்ததாக ஓபிஎஸ் கூறுவதன் மூலம் தற்போது பாஜக அதிமுகவை இயக்குவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜக தலைவர்களுடன் மோதலில் ஈடுபட்டு வரும் ஓபிஎஸ் தற்போது பாஜகதான் அதிமுகவை இயக்குகிறது என்பது போன்ற கருத்தை வெளிப்படையாக பேசத் தொடங்கி இருப்பதுஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x