Published : 16 Feb 2018 02:39 PM
Last Updated : 16 Feb 2018 02:39 PM

காவிரி தீர்ப்பில் யாரும் ஓட்டு அரசியல் செய்ய வேண்டாம்: கமல்ஹாசன் பேட்டி

காவிரி தண்ணீர் அளவு குறைந்தது வருத்தம் தான், ஆனால் தீர்ப்பு அழுத்தமாக இருப்பதில் மகிழ்ச்சி. இது தொடர்பாக ஓட்டு அரசியலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது:

''ஆடுதாண்டும் காவேரி அகண்ட காவேரி ஆவது தமிழகத்தில் தான் அதனால் தீர்ப்பில் எனக்கு ஏமாற்றம்தான். நீரின் அளவு குறைக்கப்பட்டதில் எனக்கு வருத்தம் தான். நான் பத்தாண்டுகளுக்கு முன் குறிப்பிட்டிருந்தேன். நாமெல்லாம் குரங்காக இருந்த காலத்திலேயே காவிரி ஓடியது. அதனால் காவிரிக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறியிருந்தேன்.

அதையே உச்ச நீதிமன்றமும் தீர்ப்பாக கூறியுள்ளது எனக்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால் தற்போது தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைவாக கிடைத்தாலும் அதை பத்திரப்படுத்தவேண்டியது தமிழர்களின் கடமை. அதைவிட முக்கியமான கடமை ஒன்று இருக்கிறது. அது இரு மாநிலங்களுக்கான ஒற்றுமை.

ஓட்டு வேட்டை என்று நினைத்துக்கொண்டு இந்த சச்சரவுகளை தூண்டுபவர்கள் தேசியம் மறந்து பேசுகிறார்கள் என்பதுதான் என் கருத்து. காவிரி நீர் இருவருக்கும் சொந்தம், யாரும் அதை தனியாக உரிமை கொண்டாட முடியாது என்பது தீர்ப்பு. இன்னும் 15 ஆண்டுகளுக்கு அப்பீலுக்கு போக முடியாது என்றும் தீர்ப்பு.

அதற்குள் நாம், கிடைக்கும் தண்ணீரை எப்படி சேமிப்பது பாசனத்துக்கு பயன்படுத்துவது என்பதைத்தான் சிந்திக்க வேண்டும். இந்த ஓட்டு விளையாட்டு விளையாடுகிறேன் பேர்வழி என்று சச்சரவுக்கு வழிவகுத்து விடக்கூடாது எப்ன்பதே  என்  தாழ்மையான வேண்டுகோள்.

ஓட்டப்பம் வீட்டைச்சுடும், தன்வினை தன்னைச்சுடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அது நம் தமிழர்களுக்கும் அந்த கடமை இருக்கிறது, கர்நாடக மக்களுக்கும் அந்தக் கடமை இருக்கிறது. இதில் தண்ணீர் அளவு குறைந்தது வருத்தம்தான். ஆனால், தீர்ப்பு அழுத்தமாக இருப்பதில் மகிழ்ச்சித்தான்.

ஏற்கெனவே தீர்ப்பின் படி கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடவில்லை, தற்போது இது நடக்குமா?

ஆர்ப்பாட்டத்தினால் அது நடக்காது என்று  நினைக்கிறேன்,. நான் சொல்வது பழைய யுக்தி. காந்தி காலத்து யுக்தி. இரு மாநிலங்களும் ஒற்றுமையாக கலந்து பேசி தீர்வு காண முடியும். காவிரி குடும்பம் என்ற ஒன்று இருந்தது. இரு மாநில விவசாயிகளும் கலவரம் உச்சத்தில் இருந்த போது கூடிப்பேசி கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஒற்றுமை காத்தார்கள்.

அந்த ஒற்றுமை மீண்டும் வரவேண்டும். நீங்கள் ஒற்றுமை காத்தால் தான் நதி இணைப்பு பற்றி எல்லாம் பேச முடியும். நதி தேசிய சொத்து என்று நினைத்தால் தான், நாம் அதை இணைப்பது பற்றி எல்லாம் பேச முடியும். ‘வீடு பற்றி எரியும் போது பீடி பத்த வைக்கிற’ இந்த ஓட்டு விளையாட்டினால் மக்கள் இரு தரப்பிலும் பாதிக்கப்படுகிறார்கள். எந்த கலாச்சாரத்திற்கும் அது உகந்ததல்ல.

கர்நாடகாவில் தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் இது பற்றி உங்கள் கருத்து?

ஓட்டு வேட்டை என்று சொன்னதே அதைத்தான், அந்த விளையாட்டு விளையாடக்கூடாது என்பது எனது அழுத்தமான கருத்து.

விவசாயமும் விவசாயிகளும் முக்கியம் என்று அமெரிக்கா வரையிலும் பேசி உள்ளீர்கள், 15 டிஎம்சி தண்ணீர் குறைவை எப்படி பார்க்கிறீர்கள்?

ஏமாற்றம் தான், அதிர்ச்சிதான், வருத்தம் தான், இருந்தாலும் கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பை பயன்படுத்திக்கொண்டு உள்ளதை வைத்து நாம் நமது பாசனத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்கவில்லை என்பது தான் முதல் குற்றம்.

நாம் செய்தது எல்லோரும் செய்தது அந்தக் குற்றத்தைத்தான். நிலத்தடி நீரை அதிகரிக்கும் வேலையை அனைவரும் செய்வோம். காவிரி நீரைப் பெறுவதில் சண்டைபோடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாம் அதை பேசித்தான் பெற வேண்டும்.''

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x