Published : 16 Feb 2018 12:42 PM
Last Updated : 16 Feb 2018 12:42 PM

காவிரி வழக்கில் தமிழக உரிமை பறிபோய் விட்டது; உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக: ஸ்டாலின்

காவிரி நீர் குறைக்கப்பட்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி. காவிரி தண்ணீரின் அளவு, தற்போது 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும், காவிரி நீர் திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றம் அவ்வப்போது பிறப்பித்த உத்தரவுகளையும் இதுவரை மதிக்காத கர்நாடக மாநிலத்திற்கு, ஏற்கனவே வழங்கப்பட்டதை விட கூடுதலாக 14.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து இருக்கிறது.

எனவே, புவியியல் மற்றும் சரித்திரரீதியாக தமிழகத்திற்கே உரித்தான காவிரி நீரைப் பெறுவதற்கான, நியாயமான ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் போதிய அளவில் முன்வைக்கத் தவறிய அதிமுக அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்டவற்றின் உத்தரவுகளை மட்டுமல்ல முதலமைச்சர்கள், பொதுப்பணித்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளையும் அலட்சியப்படுத்தி வரும் கர்நாடக மாநிலத்திற்கு இப்படியொரு நிவாரணம் கிடைத்திருப்பது நடுநிலையாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட பிறகும், காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் அதை நிறைவேற்ற மறுத்த மத்திய பா.ஜ.க. அரசும், காவிரி இறுதி வழக்கு விசாரணையில் கருகிக்கிடக்கும் பயிர்களையும், காய்ந்து கிடக்கும் வயல்களையும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு போகாமல் தவறவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும் தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் மிகப்பெரும் பாதிப்பை உண்டாக்கிவிட்டன.

காவிரி நதிநீர்ப் பிரச்னையில் தலைவர் கருணாநிதி தமிழகத்திற்குப் பெற்றுத் தந்த உரிமைகளை, அதிமுக அரசு இன்றைக்கு பறிகொடுத்து விட்டது. ஆகவே, தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டு, தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

அந்தக் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x