Last Updated : 15 Feb, 2018 01:49 PM

 

Published : 15 Feb 2018 01:49 PM
Last Updated : 15 Feb 2018 01:49 PM

வன வளத்தை இழக்கும் தமிழகம்: தென் மாநிலங்களிலேயே குறைந்த வளர்ச்சி

தமிழகம் தனது வனவளத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெறும் 102 சதுர கி.மீ பரப்பளவுக்கு மட்டும்தான் காடு வளத்தை விரிவுபடுத்தி இருக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தென் மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தின் வன வளர்ச்சி என்பது மிக, மிகக் குறைவாகும். இதனால், வரும் காலங்களில் தமிழகமும், தமிழக மக்களும் வெப்பத்தின் தாக்கத்தை அதிகமாக உணர வேண்டியது வரும்.

நகர் மயமாதலின் போக்கு அதிகரிப்பு, மேம்பாட்டுப் பணிகளுக்காக மரத்தை வெட்டுதல் ஆகிய காரணங்களால் மரங்களின் பசுமை ஸ்பரிசம் குறைந்து வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு தேசிய மாநில வன வளம் குறித்த அறிக்கையில், தமிழகத்தில் ஒட்டுமொத்த வனப்பகுதி மற்றும் மரங்கள் நிறைந்த பகுதி என்பது 30 ஆயிரத்து 952 சதுர கி.மீ. இதில் 26 ஆயிரத்து 281 சதுர கி.மீ வனங்களாலும், 4,671 சதுர கி.மீ மரங்களாலும் சூழப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 23.80 சதவீதப் பகுதி மரங்களால் சூழப்பட்டுள்ளது. இதையே தேசிய அளவில் எடுத்துக்கொண்டால், தமிழகத்தின் நிலை வெறும் 3.86 சதவீதமாகும். கடந்த 2015-ம் ஆண்டில் இது 23.72 சதவீதமும், 3.88 சதவீதமும் இருந்தது.

தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக, தெலங்கானா ஆகியவற்றோடு தமிழகத்தை ஒப்பிட்டால் நமது காடு வளர்ப்பின் திறன், பாதுகாப்பு திறன் கவலைக்கிடமாகும்.

கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் ஆந்திரா மாநிலம், 2,141 சதுர கி.மீ வனங்களை வளர்த்துள்ளது, கர்நாடக மாநிலம் 1,101 சதுர கி.மீ, கேரளா 1,041 சதுர கி.மீ, தெலங்கானா 565 சதுர. கி.மீ அளவுக்கு தங்களின் வனப்பரப்பை அதிகப்படுத்தியுள்ளன.

ஆனால், தமிழகம் வெறும் 102 சதுர கி.மீ வனப்பரப்பை மட்டுமே அதிகப்படுத்தி இருக்கிறது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் நமக்கு உணர்த்தும் முக்கிய விஷயமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் காடுகளின் பரப்பு, மரங்களின் இருப்பு குறைந்தாக தெரிவிக்கிறது.

இதில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் காடுகளின் பரப்பளவு 144 சதுரகி.மீ சரிந்துள்ளது.

இதேபோல, வேலூர் 28 சதுர கி.மீ, கிருஷ்ணகிரி 38 சதுர கி.மீ, கடலூர் 34 சதுர கி.மீ, புதுக்கோட்டை 23 சதுர கி.மீ, தஞ்சை 22 சதுர கி.மீ, நாகப்பட்டினம் 22சதுர கி.மீ வனப்பரப்பை இழந்துள்ளன.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், தமிழக பசுமை இயக்கத்தின் இணை செயலாளருமான எஸ். ஜெயச்சந்திரன் கூறுகையில், "நீலகிரியில் உள்ள யூக்காலிப்டஸ், வாட்டல், பைன் மரங்கள் வர்த்தக நோக்கத்துக்காவே வெட்டப்பட்டதே தவிர மற்ற வகையில் வனங்கள் ஏதும் அழிக்கப்படவில்லை. பவானி, மோயார், கபினி, சேலையாறு ஆகியவற்றுக்கு நீர்பிடிப்பு பகுதி நீலகிரி என்பதால், இங்கு கடந்த பல ஆண்டுகளாக எந்தவிதமான வனஅழிப்பும் நடக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

கோவையில் உள்ள ஓசை எனும் சூழலியல் அமைப்பின் தலைவர் கே. காளிதாசன் கூறுகையில், “ வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தப் பகுதியிலும் வன அழிப்பு நடக்கவில்லை.ஆனால், வனத்தில் இருந்த பசுமைத் தன்மை குறைந்துவிட்டதை மறுக்கமுடியாது.

அதாவது, தனியார் பகுதியில் இருந்த வனப் பகுதிகளில் இருந்த மரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், நெடுஞ்சாலைகள், சாலைகள் நகர்ப்புற மற்றும் மக்கள் செல்லும் பாதைகளில் மரங்கள் குறைந்து, பசுமைத்தன்மை இழந்து காணப்படுவது வேதனையாகும்.

சாலை ஓரங்களில் மேம்பாட்டுக்காக வெட்டப்படும் மரங்கள், அதற்கு சமமான அளவுக்கு புதிதாக நடப்படுவதில்லை. சாலை விரிவாக்கம் செய்யும் முன், ஒரு பசுமைப்பகுதியை உருவாக்கிவிட்டு, சாலை அமைக்க வேண்டும் என்ற கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

நகர்ப்புறங்களில் மரங்கள் வளர்ப்பது குறித்த மிகப்பெரிய செயல்திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதை டெல்லி அரசு சிறப்பாகச் செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

2017ம் ஆண்டு முதன்முறையாக, வனப்பகுதிக்குள் இருக்கும் நீர்நிலை காடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், தமிழகத்தில் 294 சதுர ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி அதிகரித்துள்ளது.

ஆந்திரா, கர்நாடாகா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களின் வனப்பரப்பு விரிவாக்கத்தோடு ஒப்பிடும்போது தமிழகத்தின் விரிவாக்கம் மிக மிக குறைவு என்பது தமிழகத்துக்கின் சூழியலுக்கு விடுக்கும் எச்சரிக்கை மணியாகும்.

இதை மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்டு வனப்பரப்பை அதிகப்படுத்தி, மரங்களைக் காக்க வேண்டியது, ஒவ்வொரு தனி மனிதரின் பொறுப்பாகும். அரசின் தலைமையாய கடைமயாகும்.

தமிழில்: போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x