Published : 12 Feb 2018 10:27 AM
Last Updated : 12 Feb 2018 10:27 AM

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது. ஜெயலலிதா படத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் திறந்து வைத்தார்.

இந்தப் படம் 7 அடி உயரும் 5 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. ஆயில் பெயின்டிங் முறையில் படம் வரையப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் படத்தை சென்னை கவின் கல்லூரி மாணவர்கள் உருவாக்கினர்.

படத்தின் கீழ் ஜெயலலிதா அடிக்கடி பேசும் வாசகமன அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

படத் திறப்பைத் தொடந்து ஜெயலலிதாவின் உரை பேரவையில் ஒலிபரப்பப்பட்டது.

11-வது தலைவர்..

சட்டப்பேரவையில் 11-வது தலைவர் படமாக ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருவள்ளுவர், ராஜாஜி, காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், காந்தி, அண்ணா, பெரியார், காயிதே மில்லத், எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் ஆகியோரது படங்கள் உள்ளன. அந்த வரிசையில் ஜெயலலிதாவின் படம் 11-வது படமாக திறக்கப்பட்டுள்ளது.

முதல் பெண் தலைவர்..

தமிழகத்தின் முதல்வராக 6 முறை பொறுப்பு வகித்தவர் ஜெயலலிதா. உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ரூ.43 கோடியில் நினைவகம் கட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த ‘வேதா இல்லம்’ வீட்டை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

 

 

ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவை அரங்கில் அமைக்க வேண்டும் என்று அக்கட்சி எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, ஜெயலலிதா படத்தை பேரவை அரங்கில் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பேரவை அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள முதல் பெண் தலைவரின் படம் ஜெயலலிதாவின் உருவப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு

ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் பேரவை உறுப்பினர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைச் செயலாளர் பூபதி தெரிவித்திருந்தார்.

ஆனால், ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x