Published : 08 Feb 2018 08:54 PM
Last Updated : 08 Feb 2018 08:54 PM

லஞ்சம் மட்டும் போதாது, பொங்கல் போனஸும் கொடு: ஆம்பூர் டிஎஸ்பியை பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்

பிடிபட்ட மணல் லாரியை விடுவிக்க லஞ்சப் பணத்துடன் பொங்கல் போனஸையும் சேர்த்து வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஆம்பூர் டிஎஸ்பியும், உதவி ஆய்வாளர் ஒருவரும் கையும் களவுமாக சிக்கினர்.

வேலூர் மாவட்டம் சாணாங்குப்பம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(41). சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 டிப்பர் லாரி, ஒரு டிராக்டர் உள்ளது. மணல் குவாரியில் மணல் எடுத்துச் செல்ல பர்மிட் வாங்கி வைத்திருந்தார். மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மணல் வியாபாரம் செய்ய முடியவில்லை.

ஆனால் பன்னீர்செல்வம் மணலை விற்பனை செய்யவேண்டும் எனவும் ஒரு லாரிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் டிஎஸ்பி தன்ராஜ் பன்னீர் செல்வத்தை நிர்பந்தப்படுத்தியுள்ளார்.

மணல் லாரி ஓட்டாவிட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என மிரட்டியதால் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மணல் எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தை பேசி முடிக்க ஆம்பூர் நகர எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.

பன்னீர்செல்வம் லாரி உட்பட 6 லாரிக்கு ஒரு லாரிக்கு தலா ரூ.20 ஆயிரம் தர முடிவானது. அப்போது டிஎஸ்பி தன்ராஜ் திடீரென 6 லாரிக்கு பணம் கொடுத்தால் மட்டும் போதாது, கூடுதலாக பொங்கல் போனஸ் தலைக்கு 5 ஆயிரம் வீதம் 30 ஆயிரம் சேர்த்துத் தரவேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார்.

அதன் படி உதவி ஆய்வாளர் லூர்து ராஜ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 லாரி உரிமையாளர்களிடம் பணம் மற்றும் போனஸ் பற்றி கூறியுள்ளார். ஒரு லாரிக்கு ரூ.20 ஆயிரம் என 6 லாரிக்கு ரூ.1,20,000 மற்றும் பொங்கல் போனஸாக ரூ.30,000 என மொத்தம் ரூ.1,50,000 கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதில் ரூ.1,20,000 லட்சம் பணத்தை தன்ராஜும், மீதமுள்ள ரூ.30,000 பணத்தை உதவி ஆய்வாளர் லூர்து ஜெயராஜும் பிரித்துக்கொள்வதாக ஒப்பந்தம். இதுகுறித்து தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் லாரி உரிமையாளர்களிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மறைந்திருந்தனர்.

பேசியபடி லாரி உரிமையாளர்களிடம் பணத்தைப் பெற்ற இருவரையும் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பிடித்து கைது செய்தனர்.

பிடிபட்ட டிஎஸ்பி தன்ராஜ், இதற்கு முன் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை மற்றும் மதுவிலக்கு பிரிவில் இருந்த போதும் இதே போன்றுதான் செயல்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் சிக்கவில்லை.

ஆம்பூரில் லஞ்சம் வாங்கியே பொதுமக்களிடம் வெறுப்பை சம்பாதித்த டிஎஸ்பி தன்ராஜ் கைதானது தெரிந்து அப்பகுதி மக்கள் ஸ்டேஷன் முன் பட்டாசு வெடித்து தங்கள் சந்தோஷத்தைக் கொண்டாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x