Published : 02 Feb 2018 07:43 PM
Last Updated : 02 Feb 2018 07:43 PM

வர்தா புயலில் மாயமான மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

வர்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட 4 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகையை வழங்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வர்தா புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் மாயமாகினர். இதில் இருவரது உடல் மட்டும் நாகப்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கியது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட 9 மீனவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. மேலும் பேரிடர் மேலாண்மை நிதியம் சார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என 2016 டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகு ஒக்கி புயலால் மீனவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவமும் நடந்து விட்டது. தற்போது இரண்டாண்டுகள் ஆகியும் அறிவிக்கப்பட்ட இழப்பீடு வழங்கப்படவில்லை. பேரிடர் மேலாண்மை சார்பில் வழங்குவதாக அறிவித்த இழப்பீட்டு தொகையை உடனே வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x