Published : 26 Jan 2018 09:41 AM
Last Updated : 26 Jan 2018 09:41 AM

பஸ் கட்டண உயர்வால் மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தற்போது விமான நிலையம் – நேரு பூங்கா, பரங்கிமலை – நேருபூங்கா, சின்னமலை – ஆலந்தூர் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 15 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் வழக்கமாக தினமும் சுமார் 22,500 பேர் பயணம் செய்வார்கள். விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் 30 சதவீதம் வரையில் அதிகரிக்கும்.

இந்நிலையில் கடந்த வாரம் மாநகர பஸ்களின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் விரைவு பஸ்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.35, சொகுசு பஸ்களில் அதிகபட்சமாக ரூ.48, ஏசி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 முதல் அதிகபட்ச கட்டணம் ரூ.125 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாநகர சொகுசு பஸ் கட்டணம் மெட்ரோ ரயில் கட்டணத்தை நெருங்கியுள்ளது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வது 40 முதல் 50 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அரசு பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு, கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 30 முதல் 50 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. மேலும், கூட்டத்தை அதிகரிக்கும் வகையில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஓவியக் கண்காட்சி, விற்பனை கண்காட்சி, நாட்டுப்புற கலை, இசை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் நடத்தி வருகிறோம்.

இசைத் திருவிழா தொடக்கம்

வடபழனி, ஆலந்தூர் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் 3 நாட்கள் இசைத் திருவிழா 26-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. 3 நாட்களிலும் 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையில் இசை நிகழ்ச்சி நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இசையறிஞர் ஆர்.காஷ்யப் மகேஷ் தலைமையில் 26-ம் தேதி (இன்று) தமிழிசை (வடபழனி), 27-ம் தேதி டோலுகுனிதா துள்ளிசை நடனம் (ஆலந்தூர்), 28-ம் தேதி டோலு துள்ளிசை மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் (திருமங்கலம்) நடக்கவுள்ளன. அனுமதி இலவசம். இதில், ஆயிரத்துக் கும் மேற்பட்ட பயணிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தேதி வாரியாக விவரம்:

metrofarejpg 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x