Published : 22 Jan 2018 03:27 PM
Last Updated : 22 Jan 2018 03:27 PM

அப்பா அழைத்தால் அரசியலுக்கு வருவேன்: உதயநிதி பேட்டி

சினிமாவும் சினிமா நிமித்தமுமாகவே பேசும் உதயநிதியை ஒரு மாற்றத்திற்காக அரசியல் நிமித்தம் மட்டும் பேட்டி காண சந்தித்தோம். ஸ்டாலின், ரஜினி அரசியல், திமுக என்று எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் உதயநிதி தயங்காமல் பதில் அளித்தார்.

சமூக வலைதளத்தில் உங்கள் தந்தையைப் பற்றி வரும் விமர்சனங்களை எல்லாம் கவனிக்கிறீர்களா?

நிறைய பேர் அனுப்புவார்கள். அரசியலில் அப்பாவின் அனுபவம் பெரிது. தற்போது சமூக வலைதளத்தில் ஆளுக்கு ஒரு கருத்து சொல்வார்கள். அதெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ள இயலாது. அவருக்கு கட்சி செயல் தலைவர் வேலையே நிறைய இருக்கிறது. கண்டிப்பாக ஏதாவது தவறு நடந்தால், அப்பாவிடம் போய் சொல்வேன். மனது புண்படும் விதமாக வரும் விமர்சனங்களை எல்லாம் படிப்பது கூட கிடையாது. அதை ஊக்குவிப்பதுமில்லை. அப்பாவும் தன்னைப் பற்றி வரும் மீம்ஸ் மற்றும் தவறான செய்திகளைப் பார்ப்பது சிரித்தபடியே கடந்துவிடுவார்.

ரஜினி அரசியலுக்கு வந்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அவர் வந்துவிட்டாரா... கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகள் எதையும் அறிவிக்கவில்லையே. கட்சிப் பெயர் அறிவித்து போட்டியிடட்டும், அப்புறம் கருத்து சொல்கிறேன். அவர் ஆன்மிக அரசியல் என்கிறார். அப்படியென்றால் என்னவென்று எனக்கு தெரியாது. நான் ஒரு பகுத்தறிவுவாதி. அவர் அரசியலுக்கு வருவது அவருடைய விருப்பம்.

தமிழ் சினிமாவில் உங்கள் மீதிருக்கும் அரசியல் பார்வை ப்ளஸா.. மைனஸா..?

மைனஸ்தான் நிறைய பார்த்திருக்கிறேன். இவனை எப்படியாவது விமர்சித்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். காரணம், கருணாநிதி குடும்பம். அதை யாராலும் மாற்ற இயலாதே. முன்பு ஒவ்வொரு படத்திற்கு வரிச்சலுகை கிடைக்காது. நீதிமன்றத்திற்கு சென்று சண்டையிட்டுதான் வாங்கி வந்தேன். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் பிலிம் சேம்பர் என எங்கு புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லையே.

நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?

தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டித் தானே என் படங்கள் வெளியாகிறது. அப்படியென்றால் நான் அரசியலில் தானே இருக்கிறேன். ஏன் மீண்டும் வெளியே சென்றுவிட்டு, மீண்டும் அரசியலுக்கு வர நினைக்கிறீர்கள்.

திமுக கரைவேட்டி கட்டிய உதயநிதியை பொதுக்கூட்டங்களில் பார்க்க முடியுமா?

முன்பெல்லாம் போயிருக்கிறேன். தாத்தா, முரசொலி மாறன் மாமா, அப்பா ஆகியோருக்கு தேர்தலில் வாக்கு சேகரித்திருக்கிறேன். சினிமாவுக்கு வந்த பிறகு அன்பில் மகேஷிற்காக சென்று ஓட்டு கேட்டேன். ஏனென்றால் நண்பர் ஜெயித்தால் நான் ஜெயித்த மாதிரி என்பதற்காகத்தான். கட்சி வேட்டி கட்டுவதற்கு காலம் பதில் சொல்லும்.

கட்சிப் பணியில் ஈடுபட தந்தை அழைத்தால்... ?

கண்டிப்பாக அழைக்க மாட்டார்

அழைத்தால்...உங்கள் பதில்?

அழைத்தால் வருவேன், அப்பா பேச்சைக் கேட்பேன். நீண்ட வருடங்களாக அம்மா "என்ன நீ.. சினிமாவில் நடித்துக் கொண்டு, அப்பாவுடன் இரு" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பாவுடன் மகேஷ் இருக்கிறார். அவர் இருந்தால் நான் இருந்த மாதிரி தான். தற்போது சினிமா பிடித்திருக்கிறது. நிறைய நல்ல படங்களில் நடிக்கணும், தயாரிக்க வேண்டும்.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' வெற்றியடையவில்லை என்றால், எனது பயணம் வேற மாதிரி இருந்திருக்கலாம். ஆனால், அப்பா எதையுமே என்னிடம் திணித்ததில்லை. அந்த சுதந்திரத்தை தவறாக உபயோகித்ததில்லை. நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கிறேனோ இல்லையே, கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x