Published : 20 Jan 2018 01:57 PM
Last Updated : 20 Jan 2018 01:57 PM

"கார்ப்பரேட்டுகளுக்கு இடையே நடந்த போட்டியில் நான் பலியாகிவிட்டேன்" - ஆ.ராசா

எனது அமைச்சகத்தில் மர்மமான விஷயங்கள் நடப்பதாகவும், அதிகாரிகள் என்னைத் தவறாக வழி நடத்துவதாகவும் அப்போதே காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா எச்சரித்தார் என முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

2G Scam Unfolds என்ற புத்தகத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஆ. ராசா விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் இந்த விருந்துக்கு வந்திருந்தார். காங்கிரஸ் தரப்பிலிருந்து வந்திருந்தவரும் இவர் ஒருவரே.

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் நட்வர் சிங், பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு மிட்டல் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். ஆனால் ராசா வருவதற்கு முன் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

இந்த விருந்தில் பேசிய ஆ. ராசா, தான் கார்ப்பரேட் கம்பனிகளுக்கிடையே நடந்த கடும் வர்த்தகப் போட்டியில் தான்  பலியாகிவிட்டதாகக் கூறினார். "எனக்கு முன்னால் அந்தப் பதவியில் இருந்த தயாநிதி மாறன், ஸ்பெக்ட்ரம் எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தார். ஸ்பெக்ட்ரம் இருக்கிறது என்பதை அதிகாரிகள் வெளியே சொல்லிவிடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. நான் சாம் பிட்ரோடாவிடம் கலந்தாலோசித்தேன். அவர், அமைச்சகத்தில் மர்மமான விஷயங்கள் நடக்கிறது என்றும், அதிகாரிகள் என்னைத் தவறாக வழி நடத்துவதாகவும் எச்சரித்தார்.

நான் டாக்டர் மன்மோகன் சிங்கை எச்சரித்தேன். இது என்னோடு நின்றுவிடாது என்றேன். இறுதியில் 2014ல் என்ன நடந்து என்பதை நீங்கள் பார்த்தீர்கள்" என்று ராசா கூறினார்.

முன்னாள் சிஏஜி இயக்குநர் வினோத் ராய் தான் அனைத்துக்கும் காரணகர்த்தா என்று குற்றம்சாட்டிய ராசா, அவரை தீங்கிழைக்கும் எண்ணமுடையவர் என்றார். நஷ்டக் கணக்கை ஊதிப் பெரிதாக்கியதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சதியை விசாரிக்க வேண்டும் என ராசா கூறியுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அமைச்சரவையில் அவ்வளவு வழக்கறிஞர்கள் இருந்தும் யாருக்கும் நடந்துகொண்டிருந்த அரசியல் சதி கண்ணில் படவில்லை என வருத்தம் தெரிவித்த ராசா ஸ்வான் டெலிகாமிடமிருந்து பெறப்பட்டதாக சொல்லப்படும் ரூ. 200 கோடி லஞ்சம் பற்றி பேசுகையில், "நான் லஞ்சம் பெற்று எனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தகுதியில்லாத ஸ்வான் டெலிகாமை தகுதியுடையதாக ஆக்கினேன் எனக் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் நான் அந்த முடிவை சொந்தமாக எடுக்கவில்லை. சட்ட அமைச்சகம் அவர்களைப் பற்றி விசாரித்து உறுதிபடுத்திய பிறகே முடிவெடுத்தேன்" என்றார்.

ஆ. ராசா வந்திருந்த விருந்தாளிகளை அன்பாக கைகுலுக்கி வரவேற்றுக்கொண்டிருக்க ராசாவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் தூரத்தில் உட்கார்ந்து நடப்பதை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x