Published : 18 Jan 2018 09:49 PM
Last Updated : 18 Jan 2018 09:49 PM

வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டமா?- எங்களை ஆயுதம் எடுக்க வைக்க வேண்டாம்: பாரதிராஜா ஆவேசம்

வைரமுத்துவைக் காரணமாகக் காட்டி கொல்லைப்புறமாக தமிழகத்துக்குள் வர நினைப்பவர்களின் ஆசை நிறைவேறாது. எங்களை ஆயுதம் எடுக்க வைக்க வேண்டாம் என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார்.

கவிஞர் வைரமுத்து 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் ஆண்டாள் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டார். இதையடுத்து வைரமுத்துவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.அக்கட்டுரையைப் பிரசுரித்த தனியார் நாளிதழும் வருத்தம் தெரிவித்தது.

ஆனாலும் எச்.ராஜா போன்றோர் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துப் பேசினர். இதற்கு மு.க.ஸ்டாலின், ஜி.ராமகிருஷ்ணன், வைகோ, திருமாவளவன் போன்றோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று ‘கடவுள் 2’ படத் தொடக்க விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ''வைரமுத்து தனி மனிதன் அல்ல. இலக்கியத்துக்கும், தமிழுக்கும் அவர் அளித்த தொண்டு சாதரணமாதனல்ல. இந்த மண்ணோடு கலந்தவர். அவருக்கு எதிரான போராட்டத்தை தமிழர்களுக்கு எதிரான போராட்டமாகவே பார்க்கிறேன். மதம் எங்களுக்கு ஒரு போதும் கிடையாது. வைரமுத்துவுக்கு ஆதரவாக சினிமாத்துறையில் இருந்து இன்னும் பலமாக குரல் வந்திருக்க வேண்டும்.

வைரமுத்துவைக் காரணமாகக் காட்டி கொல்லைப்புறமாக தமிழகத்துக்குள் வர நினைப்பவர்களின் கனவு பலிக்காது. எங்களை ஆயுதம் எடுக்க வைக்க வேண்டாம். எங்களை குற்றப் பரம்பரை ஆக்கிவிடாதீர்கள். இந்த பிரச்சினை வழியே பிரிவினையை உண்டாக்கி அரசியல் செய்யலாம் என்று நினைத்தால் நாங்கள் ஆயுதம் எடுக்க வேண்டி வரும்'' என்றார் பாரதிராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x