Published : 15 Jan 2018 07:42 PM
Last Updated : 15 Jan 2018 07:42 PM

வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் சேப்பாக்கத்தில் திரண்டனர்

வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய சர்ச்சைக்கருத்தை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

“தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் தனியார் நாளிதழில் வைரமுத்து எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது, இது குறித்து கவிஞர் வைரமுத்து உடனடியாக விளக்கம் அளித்தார். “யாருடைய மனதினையும் புண்படுத்துவது நோக்கமல்ல. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

அக்கட்டுரையைப் பிரசுரித்த நாளிதழும் வருத்தம் தெரிவித்தது. ஆனாலும் எச்.ராஜா போன்றோர் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து பேசினர். இதற்கு மு.க.ஸ்டாலின், ஜி.ராம்கிருஷ்ணன், வைகோ, திருமாவளவன் போன்றோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

வைரமுத்துவை கண்டித்து தமிழக முழுதும் பல இடங்களில் ஆர்பாட்டம், உருவப்படம் எரிப்பு என போராட்டம் நடத்திவருகின்றனர். வைரமுத்து மீது தமிழகம் முழுதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு மூன்று காவல் நிலையங்களில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைரமுத்து மீது விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் புகார் அளித்தனர். பின்னர் அவரது வீட்டை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று மாலை சேப்பாக்கம் விருந்தனர் மாளிகை அருகில் அனைத்து இந்து அமைப்புகள் வைரமுத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வாழ்க இந்து தர்மம், வளர்க இந்து தர்மம (Long Live Hindu Dharma) சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆண்டாளை  ‘தரக்குறைவாக’ பேசிய கவிஞர் வைரமுத்துவை கண்டித்து கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த கூட்டத்தில் இந்து முன்னணி ராமகோபாலன், அனந்த பத்மாச்சாரியார், இந்து அமைப்புகளின் தலைவர்கள், இயக்குநர் விசு, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x