Published : 15 Jan 2018 04:51 PM
Last Updated : 15 Jan 2018 04:51 PM

காணும் பொங்கல் சென்னை முழுதும் போலீஸாரின் பாதுகாப்பு: கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை முழுதும் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்தியுள்ளனர். சென்னை கடற்கரையில் பொதுமக்கள் லட்சக்கணக்கில் குவிவார்கள் என்பதால் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது.

காணும்பொங்கலையொட்டி நாளை மெரினா கடற்கரையில் காவல் துறை சார்பில் செய்யப்பட்டுள்ள சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை பகுதி வரை 2000 போலீசார் மெரினவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

காணும் பொங்கல் நேரத்தில் கடலில் குளிப்பதன் மூலம் அலையில் இழுத்துச்செல்லும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் கடலில் இறங்குவதை தடுக்கும் வண்ணம் கலங்கரை விளக்கம் முதல் முதல் உழைப்பாளர் சிலை வரை உள்ள கடற்கரைப்பகுதிகள் சவுக்கு கட்டைகளால் ஆன தற்காலிக தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கடலில் இறங்காமல் இருப்பதை தடுக்கும் வண்ணம் குதிரை படை போலீஸார் வேலிக்கு வெளிப்பக்கத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர். பொதுமக்கள் குடிநீர் வசதிக்காக 2 தண்ணீர் டாங்குகள் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் போது அவர்கள் பாதுகாப்புக்காக போலீஸாரின் 5 டெண்ட்டுகள் மணற்பரப்பிலும் 1 டெண்ட் காந்தி சிலை அருகிலும் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

கடந்த 3 ஆண்டுகளாக குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் வகையில் போலீஸார் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் காணாமல் போகும் குழந்தைகள் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். கடற்கரைக்கு அழைத்து வரப்படும் குழந்தைகள் கையில் போலீஸார் பேண்ட் ஒன்றை அணிவிப்பார்கள்.

அதில் பெற்றோர் செல்போன் எண், போலீஸ் தொடர்பு எண், காவல் கட்டுப்பாட்டறை எண்கள் எழுதப்பட்டிருக்கும். இதன் மூலம் காணாமல் போன குழந்தைகள் உடனடியாக சம்பந்தப்பட்ட செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளப்பட்டு உரியவரிடம் சேர்க்கப்படும். இந்த முறை சிறப்பாக உள்ளதால் இந்த ஆண்டும் அனைத்து இடங்களிலும் போலீஸார் குழந்தைகளுக்கு கையில் பட்டைகளை கட்டி விடுவார்கள்.

பெற்றோரும் போலீஸாரை அணுகி பட்டைகளை கட்டிக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள், பொதுமக்கள் வெறும் கொண்டாட்டத்தில் மட்டும் இல்லாமல் தங்கள் குழந்தைகள் மற்றும் பொருட்கள் மீதும் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

போலீஸாரின் எச்சரிக்கையை மீறி கடலில் குதித்து அலையில் சிக்குபவர்களை மீட்க 150 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். 3 படகுகள் தயார் நிலையில் இருக்கும். இது தவிர பீச் பேட்ரால் வாகனங்கள் மூலம் போலீஸார் ரோந்து சுற்றி வருவார்கள். எச்சரிக்கையை மீறி கடலில் குளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

செல்போன், செயின் பறிப்புகள், பிக்பாக்கெடுகளை, பெண்களிடம் வம்பு செய்பவர்களை கண்காணிக்க சீருடை அணியாத போலீஸார் ரோந்து சுற்றி வருவார்கள்.

காந்தி சிலை அருகில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வாக்கி டாக்கிகள் மூலமும், கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிக்கப்படும்.

வழக்கமான நேரங்களில் சர்விஸ் சாலையில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் நாளை அனுமதி இல்லை. கடற்கரைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக

ராணி மேரி கல்லூரி , லேடி வெலிங்டன் பள்ளி உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்திக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக 6 மருத்துவ குழுக்கள் ஆம்புலன்ஸுடன் தயார் நிலையில் இருக்கும். மேலும் கழிப்பறை பிரச்சனை தீர நடமாடும் கழிப்பறை வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும். ஒரு லட்சம் பொதுமக்கள் வரை இந்த ஆண்டு கடற்கரைக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களில் பெரும்பாலானோர் இரவு 8 மணி வரை கடற்கரையில் இருந்தார்கள். இந்த ஆண்டும் அவ்வாறே இருப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தவிர பொதுமக்கள் அதிகமாக கூடும் சுற்றுலா பொருட்காட்சி, கிண்டி குழந்தைகள் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிண்டி குழந்தைகள் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்காக்களில் கூடுதலாக சிறப்புக்கவுண்டர் திறக்கப்படுகிறது. இது தவிர ஆன்லைன் மூலமும் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x