Published : 14 Jan 2018 12:06 PM
Last Updated : 14 Jan 2018 12:06 PM

கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி: ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் வைத்து தொண்டர்களை சந்தித்தார். கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க கோபாலபுரம் இல்லத்தில் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவரது வழக்கமான செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கி இருந்தார். இடையில் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு ட்ரக்யோஸ்டமி கருவி பொருத்தப்பட்டு மூச்சு பாதை சீராக்கப்பட்டது.

பொது இடங்களுக்கு வருவதோ, பொதுமக்களை சந்திப்பதோ அவருக்கு நோய்தொற்றை ஏற்படுத்தும் என்பதால் அவரது உடல் நலம் கருதி கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வந்தார். அவ்வப்போது அரசியல் கட்சித்தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து வந்தனர். முரசொலி வைரப்விழாவில் கருணாநிதி பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் உடல்நலம் கருதி மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. கடந்த முறை மோடி வந்தபோது கருணநிதியை சந்தித்தார். அப்போது வெளியே வந்த கருணாநிதி தொண்டர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் ஒரு ஆண்டு கழித்து அறிவாலயம் சென்ற கருணாநிதி கண்கலங்கினார். சாதாரண இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டாலும் உடல் நலம் பெற்ற கருணாநிதியை சமீபத்தில் திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது அடையாளம் கண்டு பெயர் சொல்லி அழைத்ததாக இருவரும் பேட்டி அளித்தனர்.

ஆண்டுதோறும் பொங்கல் நாளில் தொண்டர்களை சந்தித்து ரூ.10 வழங்கும் வழக்கமுடைய கருணாநிதி கடந்த ஆண்டு சந்திக்கவில்லை. இந்த ஆண்டு தொண்டர்களை சந்திப்பார் என்றும் ரூ.50 தொண்டர்களுக்கு வழங்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அவரது மருத்துவர்கள் முடிவுப்படி தான் முடிவெடுப்போம் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை தனது இல்லத்தில் தொண்டர்களை கருணாநிதி சந்தித்தார். ஆனால் தொண்டர்கள் அருகில் வர அனுமதிக்கப்படவில்லை. தொண்டர்களை பார்த்து கருணாநிதி கையசைத்தார். அதைப்பார்த்து தொண்டர்கள் சந்தோஷத்துடன் கோஷமிட்டனர். கருணாநிதியுடன் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x