Published : 10 Jan 2018 09:29 AM
Last Updated : 10 Jan 2018 09:29 AM

தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 15 சாட்சிகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

டிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் உட்பட 15 சாட்சிகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்ளே வங்கி மூலம் 1 கோடியே 4 லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ததாக அமலாக்கத்துறையினர் டிடிவி தினகரன் மீது அந்நிய செலவாணி மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் கூடுதல் முதன்மை பெருநகர நீதித்துறை நடுவர் (பொருளாதார குற்றம்) நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள், லண்டன் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் ராஜிவ்குமார் உள்ளிட்ட அரசு தரப்பு சாட்சிகளை தங்கள் தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி தினகரன் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். பின்னர், நீதிபதி எஸ்.விமலா உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு பணிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி நேற்று அளித்த தீர்ப்பு: ஒவ்வொரு சாட்சிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது பொதுவான விதியாகும்.

இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக உள்ள 17 பேரில் கே.எம்.நாயர் இறந்துவிட்டார். மலேசியாவைச் சேர்ந்த ராஜூவுக்கு நூறு வயதாகிறது. இதனால் இவர்களின் பெயர் சாட்சி பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. மற்ற அரசு தரப்பு சாட்சிகளை மனுதாரர் தரப்பில் விசாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

சில சாட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் இருப்பிடம் தெரியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாட்சிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த என்ன வழக்கமான நடவடிக்கை எடுக்கப்படுமோ அந்த நடவடிக்கையை மேற்கொண்டு அரசு தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x